×

மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் டீசல் அளவு 19,000 லிட்டராக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்களிக்கப்பட்ட அதிவேக டீசல் எரியெண்ணெய் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் எரியெண்ணெய் விலையினால் மீன்பிடி தொழில் லாபகரமானதாக இல்லை என்பதால், மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை தொடர்ந்திடும் வகையில், தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் எரியெண்ணெய் அளவினை உயர்த்தி வழங்க அரசுக்கு பல்வேறு மீனவ சங்கங்கள் கோரிக்கைகள் அளித்துள்ளன.

அவர்களின் கோரிக்கையினை ஏற்று, 18.8.2023 அன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும், விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட அதிவேக டீசல் எரியெண்ணெய் அளவினை, படகு ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு 18,000 லிட்டரில் இருந்து 19,000 லிட்டர் வீதமும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளுக்கு படகு ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு 4,000 லிட்டரில் இருந்து 4,400 லிட்டர் வீதமும் உயர்த்த வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பினை 2024-2025ம் ஆண்டு முதல் செயல்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 4,500 விசைப்படகு மீனவர்களும் 13,200 நாட்டுப்படகு மீனவர்களும் பயன்பெறுவார்கள்.

The post மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் டீசல் அளவு 19,000 லிட்டராக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,Chennai ,Tamil Nadu ,Livestock Husbandry, Dairy, Fisheries and Fishermen's Welfare Department ,
× RELATED கொலை வழக்கில் சரணடைபவர்கள்...