×

கொரோனா கால பணிக்கு ஊக்க மதிப்பெண் கோரி வழக்கு பார்மசிஸ்ட் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘‘கொரோனா கால பணிக்கு ஊக்க மதிப்பெண் கோரி தொடரப்பட்ட வழக்கில் பார்மசிஸ்ட் பணி நியமனத்திற்கான உத்தரவை வெளியிட இடைக்கால தடை’’ விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டாபிராமை சேர்ந்த எம்.கமலகண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், மருந்தாளுநர் படிப்பை 2019ல் முடித்துவிட்டு விழுப்புரம் மாவட்ட கேதாரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின்கீழ் மருந்தாளுநராக பணியில் சேர்ந்தேன். இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம் 889 மருந்தாளுநர்கள் பணிக்கான தேர்வு அறிவிப்பை கடந்த 2022 ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட்டது.

அதன் பிறகு பணியிடங்களின் எண்ணிக்கையை 986 என அதிகரித்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்காக, கடந்த ஏப்ரல் 27ம் தேதி நடந்த எழுத்து தேர்வில் கலந்துகொண்டேன். தேர்வுக்கு பின்பும் தேர்வு முடிவுக்கு முன்பும் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் கொரோனா காலத்தில் பணியில் இருந்த மருந்தாளுநர்களுக்கு 5 மதிப்பெண்கள் ஊக்க மதிப்பெண்களாக வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 23ம் தேதி மருத்துவ தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில் நான் 61 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தேர்வில் கட்ஆப் மதிப்பெண் 61.47 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். கொரோனா காலம் முழுவதும் மருந்தாளுநராக கேதாரிலும் அதன்பிறகு ஊத்தம்பட்டு ஆரம்ப சுகாதார மையத்திலும், அன்னியூர் ஆரம்ப சுகாதார மையத்தின் பொறுப்பு மருந்தாளுநராகவும் பணியாற்றியுள்ளேன். கடந்த 2020 முதல் இதுவரை மருந்தாளுநராக பணியாற்றி வரும் எனக்கு கொரோனா காலத்தில் பணியாற்றியதற்காக 5 மதிப்பெண்கள் ஊக்க மதிப்பெண்களாக தந்தால் நானும் மருந்தாளுநர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றிருப்பேன்.
இது தொடர்பாக கடந்த 4ம் தேதி மருத்துவ தேர்வு வாரிய, சுகாதாரத்துறை உளளிட்டோருக்கு மனு அனுப்பினேன். எனது மனு பரிசீலிக்கப்படவில்லை.

எனவே, எனக்கு கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஊக்க மதிப்பெண் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். அதுவரை பணி நியமனம் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.கிருஷ்ணன் ஆஜராகி, உதவி சர்ஜன் மற்றும் கிரேட் 2 சுகாதார ஆய்வாளர் பணிக்கு இந்த ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே போன்ற வழக்கில் பணி நியமனத்துக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து, மருந்தாளுநர்கள் பணி நியமன உத்தரவுகளை பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணைையை டிசம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post கொரோனா கால பணிக்கு ஊக்க மதிப்பெண் கோரி வழக்கு பார்மசிஸ்ட் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை...