×

பேரவையில் நிறைவேற்றிய 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை:மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அந்த நோட்டீஸில், “மக்களின் உரிமைகளைச் சிதைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார்” என்ற தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 20ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது. “மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அல்லது அவருக்குப் பதிலாக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200ன் படி, மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் கோரி அனுப்பப்படும் கோப்புகள் மீது அவர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2020ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவுகளைக் கூட பரிசீலிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு அரசு அனுப்பிய சட்ட முன் வடிவுகளை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாக பொருள்” என்று அகந்தையோடு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 12 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உச்சநீதிமன்றம் கடுமையான கருத்தை தெரிவித்த உடன் அவசர அவசரமாக 10 சட்ட முன் வடிவுகளையும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்.

உடனடியாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பேரவை விதி 143ன் படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்து 10 சட்ட முன் வடிவுகளையும் மீண்டும் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள சட்ட முன்வடிவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின் படி, ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

The post பேரவையில் நிறைவேற்றிய 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Governor ,Assembly ,Vigo ,Chennai ,Madhyamik ,General Secretary ,Vaiko ,Supreme Court ,Chief Justice ,DY Chandrachud ,Union ,
× RELATED தமிழ்நாடு ஆளுநர் திடீர் பயணத்தால்...