×

மேற்குவங்க ஒன்றிய பல்கலைகளுக்கு பிரதமர் வேந்தராக இருக்கும்போது தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு முதல்வர் வேந்தராக இருக்க கூடாதா? அமைச்சர் பொன்முடி பேச்சு, பாஜ உறுப்பினர்கள் வெளிநடப்பு

தமிழக சட்டப் பேரவையில் சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: சபாநாயகர் ஆரம்பத்திலேயே ஜனாதிபதியை பற்றியோ, கவர்னரை பற்றியோ உறுப்பினர்கள் இங்கே எதுவும் பேசக்கூடாது என்று கூறினார். ஆனால், கவர்னரை பற்றி பேச வைத்து அவரே கேட்டுக் கொண்டிருக்கிறார். பலர் நிதானம் இல்லாமல் பேசினர். 1998ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது, கவர்னரே பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கலாம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

* சபாநாயகர் அப்பாவு: கோப்பில் எடுத்த முடிவைப் பற்றி தான் இங்கு பேசினர். அதில் எந்த கவர்னர் கையெழுத்து போட்டு, இதை அனுப்பினாரோ அந்தக் கருத்தைத் தான் சொன்னார்களே தவிர, கவர்னர்கள் என்பவர்கள் மாறலாம். நாளைக்கு நீங்களே கவர்னராக ஆகலாம்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின்: அப்போதெல்லாம் வேந்தர்கள், துணை வேந்தர்கள் எல்லாம் அரசினுடைய பரிசீலனைக்கு கொண்டு வந்து, கலந்து பேசி அதற்குப் பிறகு தான் துணைவேந்தவர்களை கவர்னர் நியமிப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது அப்படி அல்ல. அதனால் தான் இதைக் கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம்.

* அமைச்சர் ரகுபதி: கவர்னராக இருப்பவர்கள் அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டும். ஆனால், அவர் இன்றைக்கு அரசியல் செய்கின்றவராக இருக்கிறார். தெலங்கானா மாநிலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் தான் உள்ளது. குஜராத் மாநிலத்திலும் மாநில அரசிடம் இருந்த நிலையில், தற்போது தான் மாற்றப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பல்கலைக்கழக வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுபவராகக் கூட மாறிவிடுவார்கள். எனவே தான் துணை வேந்தர்களை நியமிக்கின்ற அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு முதல்வரின் அரசு முன்வைத்திருக்கிறது.

* அமைச்சர் க.பொன்முடி: மேற்கு வங்காளத்தில் உள்ள ஒன்றிய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் தான் வேந்தராக உள்ளார். அதற்கு வழிவகுக்கும் சட்டம் இதற்கு வழி வகுக்காதா?. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முதல்வர் தான் வேந்தராக வேண்டும்.

* நயினார் நாகேந்திரன்: முதல்வர் கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஏற்காமல் பாஜ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.  அதனைத் தொடர்ந்து, பேரவையில் இருந்து 4 பாஜ உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

The post மேற்குவங்க ஒன்றிய பல்கலைகளுக்கு பிரதமர் வேந்தராக இருக்கும்போது தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு முதல்வர் வேந்தராக இருக்க கூடாதா? அமைச்சர் பொன்முடி பேச்சு, பாஜ உறுப்பினர்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chancellor ,Tamil Nadu Universities ,West Bengal Union Universities ,Minister ,Ponmudi ,BJP ,Tamil Nadu Legislative Assembly ,Nayanar Nagendran ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...