×

மசோதாவை நிறுத்தி வைப்பதே நிராகரிப்பதுதான்: எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தின் போது நடந்த விவாதம் வருமாறு: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி : தமிழக ஆளுநர் 10 சட்டமுன்வடிவுகளை திருப்பி அனுப்பிள்ளார். மீண்டும் அவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து, மறுஆய்வு செய்யப்பட்டு தனித் தீர்மானத்தில் முதல்வர் கொண்டு வந்துள்ளார். அதில் “I withhold assent” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி, ‘நிறுத்தி வைப்பதாக’ என்று தெரிவிக்கப்படுகின்றபோது, ரத்தாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டது என்றோ தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது நிலுவையில் இருப்பதாகத்தான் பொருள்.

சட்டத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: அது நிலுவையில் இருப்பதாக அர்த்தம் அல்ல, திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. குடியரசு தலைவரோ அல்லது ஆளுநரோ சட்டமன்றத்திலிருந்து வரக்கூடிய ஒன்றை நாங்கள் reject செய்கிறோம் என்று சொல்வது இல்லை. ஆனால், அதனுடைய பொருள்படக்கூடிய அளவில், அவர் “withheld” என்று சொல்கிறார்என்றாலே, அவர் அதை நிராகரிக்கிறார் என்பதுதான் பொருள். நீட் பிரச்னையில் சட்டமன்றத்தில் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதேபோல் ஒரு பில்லை குடியரசு தலைவருக்கு அனுப்புகிறபோது, குடியரசு தலைவரும் with- held and returned என்று அனுப்பி வைத்தார்.

அன்றைக்கு சட்டசபையில் நீங்கள் குடியரசு தலைவர் நிராகரிக்கவில்லை. with – held தான் செய்திருக்கிறார் என்று தெரிவித்திருந்தீர். ஆனால், அதற்கு அடுத்து நீதிமன்றங்களிலும் பல இடங்களில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. with – held என்று கூறினாலே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீதிமன்ற வாதங்களில் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, with – hold என்பதை ஆளுநர் நிராகரிக்கவில்லை, பரிசீலனையில் அல்லது நிலுவையில் வைத்திருக்கிறார் என்று சொல்வது முற்றிலும் தவறானது.

* சபாநாயகர் அப்பாவு: இந்த விவகாரத்தில், பேரவையில் மறு ஆய்வுக்கு சபாநாயகர் என்ற முறையில் அனுமதி அளித்துதான் விவாதம் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருக்கும் எந்த பல்கலைக்கழகத்திற்கும் ஒன்றிய அரசிடமிருந்து தற்போது மானியமே வழங்கப்படுவதில்லை. இந்த நிலையிலும் முதல்வர் வரி வருவாயின்மூலம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், 3 வருடங்களுக்குப் பிறகு மொத்தமாக withhold என்று எழுதி அனுப்பியதில், உள்நோக்கம் உள்ளதாக அனைவருமே வெளிப்படையாக கூறுகின்றனர்.

* ஜவாஹிருல்லா (மமக): ஒரு தீர்மானம் அனுப்பும்போது, ‘Governor has to give assent or withhold assent’ இந்த வார்த்தை மட்டும்தான் அங்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதைப் பயன்படுத்தித்தான் ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். எனவே, அந்த சட்ட மசோதாக்களை மறு ஆய்வு செய்வதிலே நமக்கு எந்த விதமான சங்கடமும் இல்லை.

* எடப்பாடி பழனிசாமி: இந்த விவகாரம் தொடர்பாக, அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதன் காரணத்தினாலேயே நம்முடைய தீர்மானத்திலேயே முதல்வர் ‘நிறுத்தி வைப்பதாக, withhold’ என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார். எனவே, நீதிமன்றத்தில் இருக்கின்றது. அந்த வழக்கு வருகின்றபோது இதில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா அல்லது சட்ட சிக்கல்கள் ஏற்படுமா?

* சபாநாயகர் அப்பாவு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது ஆளுநர் திருப்பி அனுப்பலாமா? அவர் திருப்பி அனுப்பினால், பேரவைக்கு என ஒரு மாண்பு இருக்கிறது.

* உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி : உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கின்ற வழக்கு நமக்கு சாதகமாக அமைய வேண்டுமென்ற நோக்கத்தோடுதான், முதல்வர் வழக்கு அடுத்து விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே, சட்டமன்றத்தையும் கூட்டி, இந்த சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றியிருக்கிறார். .

* எடப்பாடி பழனிசாமி: இந்த 10 மசோதாக்களுக்கு மட்டும் தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதா அல்லது வேறு சட்டமுன்வடிவுகளுக்கும் தொடரப்பட்டுள்ளதா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: மீதமிருக்கக்கூடிய சட்டமுன்வடிவுகள் தொடர்பான கோப்புகள் குறித்து வருகிற வழக்கு விசாரணையில் எடுத்துச்சொல்லி, ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க நிச்சயம் இந்த அரசு ஆவன செய்யும்.

*எடப்பாடி பழனிசாமி: மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.

* அவர் “withheld” என்று சொல்கிறார்என்றாலே, அவர் அதை நிராகரிக்கிறார் என்பதுதான் பொருள்.

The post மசோதாவை நிறுத்தி வைப்பதே நிராகரிப்பதுதான்: எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,Thangam South ,Edappadi ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED குடிசை வீடுகளை கான்கிரீட்...