×

பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: சுருண்டு விழுந்து இறந்த பக்தரால் பரபரப்பு


திருவனந்தபுரம்: வார இறுதி நாளான நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நேற்று முன் தினம் தொடங்கின. நடை திறக்கப்பட்ட 16ம் தேதி மாலை முதலே சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. கார்த்திகை 1ம் தேதியான நேற்று ஐயப்பனை தரிசிக்க முந்தைய நாள் இரவில் இருந்தே பக்தர்கள் சபரிமலையில் காத்திருந்தனர். நேற்று வாரத்தின் இறுதி நாள் என்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நேற்று அதிகாலை முதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து நின்றனர். நெய்யபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட பூஜைகள் நடத்துவதற்கு சன்னிதானத்தில் நீண்ட வரிசையில் நின்றதை பார்க்க முடிந்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த முரளி (59) என்ற பக்தர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் சபரிமலை வந்திருந்தார். பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு மலை ஏறிய பின்னர் இவர் 18ம் படிக்கு அருகே தேங்காய் உடைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை சன்னிதானத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

The post பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: சுருண்டு விழுந்து இறந்த பக்தரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan Temple ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...