×

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றம்: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று காலை நடந்தது. அதில், ஆளுநர் திருப்பி அனுப்பிய பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப் பேரவை கூடும்போது பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இப்படி அனுப்பி வைக்கும் மசோதாக்களில் சுமார் 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார்.

இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் வருகிற 20ம் தேதி (நாளை) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தன்னிடம் நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த 10 மசோதாக்களை அவசர அவசரமாக தமிழக அரசுக்கு கடந்த 13ம் தேதி திருப்பி அனுப்பினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கே மீண்டும் அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.

இதை தொடர்ந்து, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் 18ம் தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடியது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் காலை 9.30 மணி முதலே சட்டப்பேரவைக்கு வரத்தொடங்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.57 மணியளவில் சட்டப்பேரவைக்கு வந்தார். 9.58 மணிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைக்கு வந்தனர். காலை 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு, திருக்குறள் வாசித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் கி.வேணு, பி.வெங்கடாசலம், பா.வேல்துரை, தோப்பூர் திருவேங்கடம் ஆகியோர் மறைவுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், விடுதலை போராட்ட வீரர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 மணித்துளிகள் மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அதில் கூறியிருப்பதாவது:

15வது சட்டமன்ற பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 2 சட்டமுன்வடிவுகள், 16வது சட்டமன்ற பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 8 சட்டமுன்வடிவுகள் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், நெடுநாட்கள் நிலுவையில் வைத்திருந்து, கடந்த 13ம் தேதி அன்று எவ்வித காரணமும் குறிப்பிடாமல், அனுமதி அளிப்பதை நிறுத்திவைப்பதாக சட்டமுன்வடிவுகளில் குறிப்பிட்டு ஆளுநர் அந்த சட்டமுன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளார்.

காரணம் ஏதும் குறிப்பிடாமல் கவர்னர் அனுமதி அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்து, சட்டமுன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையதல்ல என இப்பேரவை கருதுகிறது. இந்திய அரசமைப்பு சட்ட உறுப்பு 200-ன் வரம்புரையின் கீழ், இந்த சட்டமுன்வடிவுகள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் அனுமதிக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு அனுமதி அளித்திட வேண்டும் என்பதை அவை கவனத்தில் கொள்கிறது. அதன்படி,

* 15வது சட்டமன்ற பேரவையில் 8.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 9.1.2020ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட, 2020ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு சட்டமன்ற பேரவை சட்டமுன்வடிவு எண் 2/2020);

* 9.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2020ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 12/2020);

* 16வது சட்டப்பேரவை கூட்டத்தில், 25.4.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்ற பேரவை சட்டமுன்வடிவு எண் 24/2022);

* 5.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 10.5.2022ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்ற பேரவை சட்டமுன்வடிவு எண் 29/2022);

* 9.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 10.5.2022ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை (திருத்தச் சட்டமுன்வடிவு சட்டமன்ற பேரவை சட்டமுன்வடிவு எண் 39/2022);

* 10.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்ற பேரவை சட்டமுன்வடிவு எண் 40/2022);

* 18.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 19.10.2022ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டமுன்வடிவு சட்டமன்ற பேரவை சட்டமுன்வடிவு எண் 48/2022;

* 19.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022ம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழக இரண்டாம் திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு என் 55/2022);

* 19.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 21.4.2023ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 15/2023);

* 20.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 21.4.2023ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்ற பேரவை சட்டமுன்வடிவு எண் 18/2023) ஆகிய சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 143ன் கீழ் இப்பேரவை மறு ஆய்வு செய்திட இம்மாமன்றம் தீர்மானிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து, 10 மசோதாக்கள் மீது எடப்பாடி பழனிசாமி (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜ), சிந்தனைசெல்வன் (விடுதலை சிறுத்தைகள்), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூ.), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.), சதன் திருமலைகுமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற கட்சி எம்எல்ஏக்களும் ஆதரித்து பேசினர். இதில் எடப்பாடி பழனிசாமி (அதிமுக), நயினார் நாகேந்திரன் (பாஜ) ஆகியோர் பேசிய பின் தீர்மானத்தை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தனர்.

* கவர்னர் மாளிகைக்கு மாலையே அனுப்பப்பட்டது மசோதாக்கள்
சட்டப்பேரவையில் நேற்று, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் துறை பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து 10 தீர்மானங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் அப்பாவு நிறைவேற்றினார். 10 மசோதாக்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். அப்போது, பேரவையில் இருந்த அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் மேஜையை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர். இதையடுத்து பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களும் மதியமே சட்டப்பேரவை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் மாலையில் அங்கிருந்து உடனடியாக கவர்னர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதே மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றம்: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது appeared first on Dinakaran.

Tags : Governor ,Legislative ,Meeting ,MLA K. ,Stalin ,Chennai ,Tamil Nadu Legislature ,Chief of Legislation ,M.P. K. ,
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...