×

வடக்கு காசா கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் ‘ஹமாசின் ஒசாமா பின்லேடன்’ யாஹ்யா சின்வார் எங்கே?.. இஸ்ரேல் ராணுவம் வெளியிடும் அறிக்கைகளின் மீது சந்தேகம்

காசா: வடக்கு காசாவை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியதாக கூறப்படும் நிலையில், ‘ஹமாசின் ஒசாமா பின்லேடன்’ என்று அழைக்கப்படும் யாஹ்யா சின்வார் குறித்த தகவல்கள் வெளியாகாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே வடக்கு காசா பகுதியில் கடந்த 40 நாட்களாக போர் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தீவிரவாத அமைப்பினரின் நூற்றுக்கணக்கான மறைவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. காசா நகர மையத்தை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது. ஹமாஸின் தலைமையகமாக செயல்பட்ட அல்-ஷிஃபா மருத்துவமனையையும் இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இத்தனை அதிரடிகளை இஸ்ரேல் செய்திருந்தாலும், இஸ்ரேல் ராணுவம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.

இதற்கு காரணம், கடந்த அக்டோபர் 7ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ‘ஹமாசின் ஒசாமா பின்லேடன்’ என்று அழைக்கப்படும் யாஹ்யா சின்வார் என்பவர், இஸ்ரேல் ராணுவத்தின் பிடியில் சிக்கவில்லை. இதனால் இஸ்ரேல் ராணுவத்துடன் தோளோடு தோள் இணைந்து செயல்படும் உளவுத்துறை நிறுவனமான ‘மொசாத்’ ஏமாற்றமடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அளித்த பேட்டி ஒன்றில், ‘ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரும், அவரது படைகளையும் பதுங்கு குழியில் சுற்றி வளைத்தோம்’ என்று கூறினார். அதேபோல் பதுங்கு குழியை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்த போது, யாஹ்யா சின்வார் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவரது ​​அனைத்து தகவல் தொடர்பு வழிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டன.

ஆனால் அவரது மரணம் குறித்தோ, அவர் இருக்குமிடம் குறித்தோ இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை. அதேநேரம் சுமார் 500 கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை வலையமைப்பில், அவர் தனது இருப்பிடங்களை தொடர்ந்து மாற்றி வருவதாக கூறப்படுகிறது. பல இடங்களில், சுரங்கப்பாதைகள் மிகவும் ஆழமாக கட்டப்பட்டுள்ளதால், இஸ்ரேலிய ராணுவம் அந்த இடங்களுக்குள் நுழைவு மிகவும் கடினமானதாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், யாஹ்யா சின்வார் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் வரை காசாவை கைப்பற்றிவிட்டதாக கூறும் இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றுக்கள் வெறும் அறிவிப்புகளாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தலைமறைவாக உள்ள யாஹ்யா சின்வார், ‘பயங்கரவாதத்தின் ஹிட்லர்’ என்று இஸ்ரேல் அழைக்கிறது. இஸ்ரேலில் நடந்த படுகொலைகளுக்கு அவர்தான் பொறுப்பு என்றும், 1,400 இஸ்ரேலியர்கள் மற்றும் 230 பிணையக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதற்கு மூளையாக செயல்பட்டவர் என்றும் இஸ்ரேல் கூறி வருகிறது. பாலஸ்தீனியர்களை சித்திரவதை செய்து கொல்லும் அளவுக்கு கொடூரமானவர் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் நுழைந்தபோது, ​​அவர் தனது சுரங்கப்பாதைக்குள் ஒளிந்து கொண்டதாகவும், அவர் ஒரு கோழை என்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுரங்கப்பாதையின் பதுங்கு குழிகளில் இருந்து பேசிய யாஹ்யா சின்வார், ‘எனது சுரங்கப்பாதை கட்டமைப்பே, எனது பலம்’ என்று கூறினார். அவரைப் பொறுத்தவரை, ஹமாசின் மிகப்பெரிய பலம் அதன் போராளிகள் அல்ல, அதன் சுரங்கப்பாதை வலையமைப்பே காரணம். காசா பகுதிக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று உலகமே பார்க்கிறது. இன்னொன்று பூமிக்கு அடியில் இருக்கும் ரகசிய பாதை. ஹமாஸ் அமைப்பினர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பயன்படுத்தும் அந்த ரகசிய பாதை தான், இஸ்ரேலுக்கு சவாலாக அமைந்துள்ளது. மேலும் அந்த சுரங்கப்பாதைகள் அண்டை நாடுகளுடன் இணைக்கும் பாதைகளாக உள்ளன.

அதனால் ஹமாஸ் அமைப்பின் நெட்ஒர்க், அண்டை நாடுகளுடன் பரந்து விரிந்துள்ளது. மேலும் இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி தாக்குதல்கள் நடத்துவதற்கும் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான வான் தாக்குதலில் இருந்து அவர்கள் தங்களை காத்துக் கொள்வதற்கும் சுரங்கப்பாதையை பயன்படுத்திக் கொள்கின்றனர். மறுபுறம், ஹமாசின் மற்றொரு தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் வீட்டை இஸ்ரேலிய விமானப்படை தகர்த்தது. ஆனால் இஸ்மாயில் ஹனியோ தற்போது கத்தாரில் பதுங்கி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ஹமாஸ் தலைவர்களின் நாடாளுமன்றம் என்று கூறப்படும் பிரமாண்ட கட்டிடத்தை இஸ்ரேலிய ராணுவம் வெடிகுண்டு வைத்து தகர்த்தது.

அமெரிக்க புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டுப்பாட்டு மையம், அல்-ஷிபா மருத்துவமனைக்கு கீழே உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் இந்த மருத்துவமனைக்குள் நுழைந்தபோது, அங்குள்ள அறைகளில் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி, கையெறி குண்டு, ரைபிள் மேகசின் ஆகியவை இருந்தன. மருந்துகள் இருக்க வேண்டிய அலமாரிகளில் ஆயுதங்களும் தோட்டாக்களும் வைக்கப்பட்டிருந்தன. ஹமாஸின் ராணுவப் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டது. இந்த ஆதாரங்களை காணொளி மூலம் இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் வெளியிட்டது.

இஸ்ரேல் நிதியில் சுரங்கப்பாதை
இஸ்ரேல் ராணுவத்தின் உளவுத்துறை அறிக்கையின்படி, காசாவில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதைகள், எகிப்து நாட்டில் இருந்து பொருட்களை கடத்துவதற்காக கட்டப்பட்டன. வான்வழி கண்காணிப்பை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதால், ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்கி வைக்கும் இடமாக சுரங்கப்பாதைகளை பயன்படுத்தத் தொடங்கினர். ஹமாஸ் உருவாக்கிய இந்த சுரங்கப்பாதைகள் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 30 மீட்டர் ஆழம் வரை இருக்கும். சில சுரங்கப் பாதைகள் 70 மீட்டர் ஆழம் வரை இருக்கும். இஸ்ரேல் ராணுவம் எவ்வளவு வீரியமான குண்டுகளை வீசினாலும், அதிலிருந்து தப்பிக்கும் வகையில் வலுவான கான்கிரீட்டால் கட்டமைக்கப்பட்டது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த சுரங்கப்பாதைகள், காசா மக்களின் குடியிருப்பாக (இஸ்ரேல் நிதியுதவி) பயன்படுத்தப்படும் பொருட்களிலிருந்து கட்டப்பட்டுள்ளன. ஒரு சுரங்கப்பாதை அமைப்பதற்கு சுமார் மூன்று மில்லியன் டாலர் வரை செலவாகும் என்று உளவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு காசாவிற்கு ஓட்டம்
பிரபல பத்திரிகையான பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையில், ‘ஹமாஸ் தலைவர்கள் சிலர் தெற்கு காசாவின் மிகப்பெரிய நகரமான கான் யூனிஸுக்கு தெற்கே சென்றுவிட்டனர். அதனால் அப்பகுதியை சுற்றிவளைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. மேலும் கான் யூனிஸூக்கு தெற்கே வசிக்கும் மக்கள், அங்கிருந்து தப்பிச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் துண்டுப் பிரசுரங்களை வீசி வருகிறது’ என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று கான் யூனிஸுக்கு தெற்கு பகுதியின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 26 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post வடக்கு காசா கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் ‘ஹமாசின் ஒசாமா பின்லேடன்’ யாஹ்யா சின்வார் எங்கே?.. இஸ்ரேல் ராணுவம் வெளியிடும் அறிக்கைகளின் மீது சந்தேகம் appeared first on Dinakaran.

Tags : Yahya Shinwar ,Hamas ,Osama Binlayed ,northern Gaza ,Israel ,Gaza ,Osama Binladen ,Yahya Sinwar ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்