×

கைதான 7 பேரை குண்டாசில் இருந்து விடுவிக்க முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கப்படும் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி செய்யாறு சிப்காட் விரிவாக்க பணி ரத்து கோரி போராட்டம்

திருவண்ணாமலை, நவ.18: இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை தடுக்க திட்டமிட்டு சிலர் செயல்படுகின்றனர். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள 7 ேபரையும் விடுவிக்க முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலையில் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ,வேலு அளித்த பேட்டி: திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் நிறைந்தது. வேறு தொழிற்சாலைகளோ, வேலை வாய்ப்புகளோ இல்லாத நிலை இருந்தது. எனவே, தொழிற்சாலைகள் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் திமுக ஆட்சி காலத்தில் செய்யாறு சிப்காட் கொண்டு வரப்பட்டு 3 பகுதிகளாக நிலம் கையகப்படுத்தப்பட்டன. முதற்கட்டமாக 602 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 13 கம்பெனிகள் தொழிற்சாலைகள் தொடங்கின. அதில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதிகளை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை பெற்றனர். 2ம் கட்டமாக 1860 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் முதல்வரின் முயற்சியால் 55 கம்பெனிகள் வந்திருக்கின்றன. அதன் மூலம் அயல்நாட்டு தொழில் நிறுவனங்களை ெகாண்டுவந்து ஒரு லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

3வது கட்டமாக 1200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த பலகட்டங்களாக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி செய்யாறு பகுதியில் உள்ள 9 கிராமங்களில் 1881 விவசாயிகளிடம் இருந்து நிலம் எடுக்கப்படுகிறது. அதில், 239 பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது என்பதற்காக சந்தை மதிப்பைவிட 3 மடங்கு விலையை அரசு வழங்குகிறது. அதுவும், தரிசு நிலத்தைத்தான் எடுக்கப்படுகிறது. ஆனால், இப்பகுதிக்கு தொடர்பில்லாத வெளி மாவட்டங்களை சேர்ந்த சிலரின் தூண்டுதலால் 124 நாட்களாக சிலர் போராட்டத்தை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அருள் என்பவர் திட்டமிட்டு போராட்டத்தை தூண்டி விட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட 9 கிராமங்களில் மட்டும் 4 ஆயிரம் பேர் சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தேவன் என்பவருக்கு ஒரு சென்ட் நிலம் கூட கிடையாது. ஆனால், வெளியாட்கள் தூண்டுதலால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அரசு எந்த பணிையையும் செய்யக்கூடாது. பட்டதாரி இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை தடுக்கும் உள்நோக்கத்துடன் சிலர் போராட்டத்தை தூண்டி விட்டுள்ளனர்.

விவசாயிகள் பாதிக்க வேண்டும் என எப்போதும் நினைக்க மாட்டோம். விவசாயிகளை கைது செய்ய அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. விவசாயிகள் வஞ்சிக்கப்பட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அவர்களின் நிலங்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. வைக்கம் நினைவிடம் ஆய்வுக்காக சென்றிருந்ததால் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தகவல் தற்போதுதான் எனக்கு தெரிவிக்கப்பட்டது. சிலரது தூண்டுதலில் இப்போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் என்னிடம் மனு அளித்துள்ளனர். எனவே, தவறான பிரசாரத்தால் மாட்டி கொண்டிருக்கிற 7 பேருக்கும் குண்டர் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வரிடம் இந்த மனுக்களை நேரில் அளித்து பரிதாபமாக இருக்கிற இந்த மக்களுக்காக பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்க இருக்கிறேன்.

கடந்த ஆட்சியில் இதே பகுதியில் சிப்காட் விரிவாக்கத்துக்காக நிலத்தை கையகப்படுத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டார். ஆனால், அவரால் செயல்படுத்த முடியவில்லை. தற்போது, நாங்கள் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆத்திரப்பட்டு அரசியல் செய்கிறார். இவ்வாறு, அவர் தெரிவித்தார். அப்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post கைதான 7 பேரை குண்டாசில் இருந்து விடுவிக்க முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கப்படும் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி செய்யாறு சிப்காட் விரிவாக்க பணி ரத்து கோரி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chipgat ,Minister ,AV Velu ,Chief Minister ,Kundazi ,Thiruvannamalai ,
× RELATED திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்