×

உயர்கல்வி துறை பரிந்துரையால் 56 பேராசிரியர்கள் நீக்கம் அண்ணா பல்கலை. தேர்வு கட்டண உயர்வு வரும் செமஸ்டருக்கு நிறுத்தி வைப்பு: அமைச்சர் பொன்முடி பேட்டி

விழுப்புரம்: அண்ணா பல்கலையில் தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகமாக இருக்கிற போது உதவி பேராசிரியர் பணியிடத்துக்கான தகுதிகளை அவர்களே நிர்ணயித்து அனுப்பியிருக்கிறார்கள். கல்வித்தகுதி குறைவாக இருந்தவர்களைக்கூட அப்போது தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் உரிய கல்வித்தகுதி இல்லாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு உயர்கல்வி துறை பரிந்துரை செய்து, அவர்கள் மீது துணைவேந்தரும் பல்கலைக்கழக சிண்டிகேட்டும் நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்கக் கூடியது.

அந்தப் பல்கலைக்கழகம் 2011ம் ஆண்டு ஏற்கனவே தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய காலகட்டத்தில் யுஜிசி விதிகளை மீறி ஏராளமான பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை நியமித்தது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அரசு நிர்வாகம் அந்த பல்கலைக்கழகத்தை ஏற்று கடினமான சூழ்நிலையிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பாடப்பிரிவுக்கு ரூ.150லிருந்து கட்டணம் ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுவாகவே அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேர்வு கட்டணம் ஒரே சீராக இருக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் குறைவாக உள்ள பல்கலைக்கழக தேர்வு கட்டணத்தை உயர்த்துவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருந்த போதிலும் இந்த ஆண்டு செமஸ்டருக்கு தேர்வு கட்டணம் உயர்த்தியது நிறுத்தி வைக்கப்படுகிறது. ஒரே மாதிரியான தேர்வுகட்டணம் குறித்து ஆலோசனை நடத்தி அடுத்த ஆண்டு முதல் அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தவறான வினாத்தாள் தொடர்பான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வித்தாள் தயாரித்த குழுவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post உயர்கல்வி துறை பரிந்துரையால் 56 பேராசிரியர்கள் நீக்கம் அண்ணா பல்கலை. தேர்வு கட்டண உயர்வு வரும் செமஸ்டருக்கு நிறுத்தி வைப்பு: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Anna University ,Minister ,Ponmudi ,Villupuram ,Higher ,Higher Education Department ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு...