×

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதா மீண்டும் நிறைவேறுகிறது: அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் பங்கேற்க முடிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் திருப்பி அனுப்பிய பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜ உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

திமுக ஆட்சியில், ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும்போது பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் முக்கிய மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இப்படி அனுப்பி வைக்கும் மசோதாக்களில் சுமார் 20 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார். அதில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 2 மசோதாக்களையும் ஆளுநர் கிடப்பில் போட்டு விட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், தமிழக கவர்னரின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியது.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் வருகிற 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தன்னிடம் நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த சுமார் 10 மசோதாக்களை அவசர அவசரமாக தமிழக அரசுக்கு நேற்று திருப்பி அனுப்பி உள்ளார். இதில், மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கே வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்குவது, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் வழங்குவது, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிப்பது என 10 மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி கவர்னருக்கே அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும் நேற்று முன்தினமே சுற்றறிக்கை மற்றும் நிகழ்ச்சி நிரல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் விவரங்களை வெளியிட்டு அந்த மசோதாக்களில் மேலும் எந்தவித திருத்தமும் இல்லாமல் அப்படியே மீண்டும் நிறைவேற்றுவது குறித்து விளக்கி பேசி, தீர்மானத்தை முன்மொழிவார்.

அதைத்தொடர்ந்து 10 மசோதாக்களை அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிய கம்யூ., இந்திய கம்யூ., மதிமுக, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் ஆதரித்து பேசுவார்கள். இதையடுத்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த மசோதாக்கள் தனித்தனியாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொள்வார். அதன்படி மசோதாக்கள் நிறைவேற்றப்படும். தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்படும் 10 மசோதாக்களும் கூட்டம் முடிந்ததும் இன்று மாலையே சட்டப்பேரவை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

பின்னர் அங்கிருந்து உடனடியாக கவர்னர் மாளிகைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதே மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தாமதப்படுத்தினால், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தமிழக கவர்னர் தள்ளப்பட வாய்ப்புள்ளது. இன்று நடைபெறும் பேரவை கூட்டத்தில் அதிமுக, பாஜ உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் கலந்து கொள்கிறார்கள்.

The post தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதா மீண்டும் நிறைவேறுகிறது: அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் பங்கேற்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Chennai ,Tamil ,Nadu Legislative Assembly ,
× RELATED காவிரி விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க...