×

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான சம்பவம் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது காவல்துறையினர் மே 22ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வாதிட்டார். அவர் வாதிடும்போது, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டராக இருந்த வி.வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன?

ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விளக்கமளிக்க, சிபிஐ தரப்பு வழக்கறிஞரையும், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞரையும் அடுத்த விசாரணையின்போது ஆஜராக சொல்வதாக அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் இன்னும் பணியில் நீடிக்கிறார்களா அல்லது ஓய்வு பெற்று விட்டார்களா என்பது தெரியவில்லை.

அரசு தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்று இருந்த காவல்துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவ் ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் பிரச்னை ஏற்பட்டபோது திறமையாக கையாண்டு நீதிமன்றம் சுமுகமாக செயல்பட செய்தவர். அவர் எப்படி இந்த குற்றச்சாட்டுக்குள் ஆளானார் என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, தற்போது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன, துப்பாக்கி சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

* அதிகாரிகள் யார், யார்?
1. தூத்துக்குடி மாவட்ட அப்போதைய கலெக்டர் என்.வெங்கடேஷ், 2. தெற்கு மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், 3. டிஐஜி கபில் குமார் சி.சரத்கர், 4. தூத்துக்குடி எஸ்பி பி.மகேந்திரன், 5. டிஎஸ்பி ஆர்.லிங்கதிருமாறன், 6. இன்ஸ்பெக்டர் என்.ஹரிகரன், 7. இன்ஸ்பெக்டர் டி.பார்த்திபன், 8. அப்போதைய இன்ஸ்பெக்டரும் தற்போது திருநெல்வேலி மாநகர டிஎஸ்பியாக உள்ளவருமான திருமலை, 9. கான்ஸ்டபிள் ராஜா, 10. கான்ஸ்டபிள் தாண்டவமூர்த்தி, 11. கான்ஸ்டபிள் மதிவாணன்,
12. கான்ஸ்டபிள் எம்.கண்ணன், 13. எஸ்.ஐ சொர்ணமணி, 14. கான்ஸ்டபிள் எம்.சங்கர், 15. கான்ஸ்டபிள் சதீஷ் குமார், 16. கான்ஸ்டபிள் ஏ.சுடலைக்கண்ணு, 17. எஸ்ஐ எம்.ரென்னிஸ், 18. தலைமை காவலர் ஏ.ராஜா, 19. தூத்துக்குடி துணை தாசில்தார் பி.சேகர் (தற்போது துணை தாசில்தார் தேர்தல்), 20. மண்டல துணை தாசில்தார் எம்.கண்ணன், 21. தூத்துக்குடி முன்னாள் மண்டல கலால் அதிகாரி.

The post தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான சம்பவம் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,High Court ,Chennai ,Judge ,Aruna Jagatheesan Commission ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...