×

கொதிக்கும் எண்ணெய் சட்டியில் மனைவி கையைவிட சொன்ன கணவன்: தடுத்து நிறுத்திய அதிகாரியுடன் வாக்குவாதம்

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பூதலப்பட்டு மண்டலம், தேனபள்ளி பஞ்சாயத்து, எஸ்டி காலனியை சேர்ந்தவர் குண்டய்யா. இவரது மனைவி கங்கம்மா. இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவி கங்கம்மாவிற்கு அதே கிராமத்தை சேர்ந்த வேறொருவருடன் தகாத உறவு இருப்பதாக குண்டய்யாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நேற்று மாலை பஞ்சாயத்து நடந்தது. அப்போது, கங்கம்மா கொதிக்கும் எண்ணெயில் கைவிட வேண்டும்.

அப்போது, அவரது கையில் காயம் ஏற்பட்டால் நடத்தையில் தவறு இருப்பது உறுதி செய்யப்படும். கை சுட்டெரிக்காமல் நன்றாக இருந்தால் குற்றமற்றவர் என்பது உறுதியாகிவிடும் என பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கங்கம்மாவும் ஊர் பெரியோர் மற்றும் கணவனின் முடிவை ஏற்றுக்கொண்டு கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கைவிட ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, எண்ணெய்யை நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்து சட்டியில் தயாராக வைத்திருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பூதலப்பட்டு மண்டல எம்பிடிஓ கவுரி சம்பவ இடத்திற்கு சென்று ஊர் பெரியோர் மற்றும் கங்கம்மாவின் கணவர் குண்டய்யாவிடம் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது தவறு என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவரது பேச்சை மதிக்காத அவர்கள் அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எம்பிடிஓ கவுரி பூதலப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், குண்டய்யா மற்றும் அவரது மனைவி கங்கம்மாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், இருவருக்கும் ஆலோசனை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

The post கொதிக்கும் எண்ணெய் சட்டியில் மனைவி கையைவிட சொன்ன கணவன்: தடுத்து நிறுத்திய அதிகாரியுடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Kundaiya ,ST Colony ,Thenapalli Panchayat ,Poothalappatu Mandal, Chittoor District, Andhra State ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து...