×

கோவையில் மேலும் ஒரு பாஸ்டியர் ஆய்வகம்: ஒன்றிய இணை அமைச்சர் பேட்டி

ஊட்டி: கோவையில் 30 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு பாஸ்டியர் ஆய்வகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1907ம் ஆண்டு பாஸ்டர் ஆய்வகம் துவங்கப்பட்டது. இது ரேபிஸ் நோய் கண்டறியும் மையமாகவும் செயல்படுகிறது. இந்த ஆய்வகத்தில் வெறி நாய் கடிக்கு பயன்படுத்தப்படும் மருந்து மற்றும் தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமல் (டிபிடி) என பல நோய்க்கான மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த பாஸ்டியர் ஆய்வகத்தை நேற்று ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் ஆய்வு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பிஎம் ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிரதமரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். ஆய்விற்குப் பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “பாஸ்டியர் ஆய்வகத்தில் வெறி நாய்கடி, ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான் போன்ற தடுப்பு மருந்துகள் சிறப்பாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வகத்தின் சிறப்பை கருத்தில் கொண்டு, கோவை அருகே உள்ள பிரஸ் காலனி பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் நிலம் வாங்கப்பட்டு மேலும் ஒரு பாஸ்டியர் ஆய்வகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு பல தரப்பு நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

* இந்தி தெரியுமா… கையை தூக்குங்க…
ஆய்வகத்தை ஆய்வு செய்த பின் பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டை வழங்கி பேச துவங்கிய அமைச்சர் பாரதி பிரவீன் பவார், இங்குள்ள எத்தனை பேருக்கு இந்தி தெரியும்? கையை தூக்குங்கள் என கூறினார். மேடைக்கு கீழே அமர்ந்திருந்த சுமார் 200க்கும் மேற்பட்டோரில் ஓரிருவர் மட்டுமே கையை உயர்த்தினர். இந்தி தெரியாது என்பதால் மேடையில் இருந்த பாஜவினரும் கப்சிப்பாக இருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர், எத்தனை பேருக்கு ஆங்கிலம் தெரியும்? என கேட்க அனைவரும் கையை உயர்த்தினர். அந்த ஏமாற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஆங்கிலத்தில் பேச துவங்கி சிறிது நேரத்தில் பேச்சை முடித்து கொண்டார். அமைச்சரின் அலுவல் ரீதியான ஆய்வின்போது உள்ளூர் பாஜவினர் மேடையில் உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து அமர்ந்து கொண்டனர். மேலும் ஆய்வு பணியின்போது புகைப்படம் எடுத்து கொள்வதற்கும் ஆர்வம் காட்டினர்.

The post கோவையில் மேலும் ஒரு பாஸ்டியர் ஆய்வகம்: ஒன்றிய இணை அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Union Minister of State ,Ooty ,Dinakaran ,
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...