×

3வது முறையாக உலக கோப்பையை தட்றோம்… தூக்குறோம்: ரோகித் மற்றும் கோவுக்கு தங்கமான வாய்ப்பு

கிரிக்கெட் என்றால் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே என்றொரு காலம் இருந்தது. 1971ல் முதல் முறையாக ஒருநாள் போட்டி அறிமுகமானதே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து இடையே நடந்த 3வது டெஸ்ட் போட்டியின் முதல் 3 நாள் ஆட்டமும் மழையால் வாஷ் அவுட்டாக, தலா 40 ஓவர் கொண்ட போட்டி (ஓவருக்கு 8 பந்து) நடத்தப்பட்டது. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ‘ஃபாஸ்ட் ஃபுட்’ கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போனது. அதன் பிறகு ஒருநாள் போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகத் தொடங்கின. ஆரம்பத்தில் வெள்ளை சீருடை, சிவப்பு பந்துதான் உபயோகிக்கப்பட்டது.

1975ல் நடந்த முதலாவது ஒருநாள் உலக கோப்பை போட்டியிலும், அடுத்து 1979ல் நடந்த 2வது உலக கோப்பையிலும் வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. லொட்டு லொட்டு என்று 5 நாட்களுக்கு பொறுமையாக விளையாடிப் பழக்கப்பட்ட இந்திய வீரர்கள், ஒருநாள் அவசர அடிக்கு உடனடியாக மாற முடியாமல் திணறினர். இதற்கு நல்ல உதாரணம்… 1975 ஜூன் 7ல் லண்டன் லார்ட்ஸ் அரங்கில் நடந்த முதல் போட்டியில், இங்கிலாந்து 60 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் எந்தவித அவசரமோ… பதற்றமோ இல்லாமல் 60 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தனர்.

போட்டியை டிராவில் முடிப்போம் என நினைத்துவிட்டார்கள் போல! அதிலும் தொடக்க வீரர் கவாஸ்கர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 36 ரன் விளாசியது! (174 பந்து, 1 பவுண்டரி) செம காமெடி. 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி இந்த வரலாற்றை மாற்றி எழுதியது. யாருமே எதிர்பாராத வகையில் பைனல் வரை முன்னேறியது மட்டுமல்ல, பரபரப்பான இறுதிப் போட்டியில் லாயிட் தலைமையிலான அசுர பலம் வாய்ந்த நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி, இந்திய அணி உலக கோப்பையை முத்தமிட்டது நாடு முழுவதும் கிரிக்கெட் புரட்சியையே உண்டாக்கிவிட்டது என்றே சொல்லலாம்.

அந்த தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியா 17 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து விழி பிதுங்கியபோது, கேப்டன் கபில் ஆட்டமிழக்காமல் 175 ரன் விளாசியது (138 பந்து, 16 பவுண்டரி, 6 சிக்சர்) இன்றளவும் ஈடு இணையில்லாத மகத்தான இன்னிங்சாக போற்றப்படுகிறது. 1987ல் அடுத்த உலக கோப்பையை இந்தியா, பாகிஸ்தான் இணைந்து நடத்தின. அந்த தொடரின் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்வியது. அன்று உலக கோப்பையை தக்கவைக்கத் தவறிய இந்திய அணி, 2வது முறையாக மீண்டும் சாம்பியனாக 28 ஆண்டுகள் காத்திருக்க நேரிட்டது.

இதற்கிடையில் வீரர்களுக்கு வண்ண சீருடை, வெள்ளைப் பந்துகள், பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை, ரவுண்ட் ராபின் லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று, சூப்பர் 6 சுற்று… புதிய விதிமுறைகள் என்று பல்வேறு மாற்றங்களுடன் ஒருநாள் கிரிக்கெட்டும், உலக கோப்பையும் புதிய பரிமாணங்களை அரவணைத்துக் கொண்டன. 1983க்கு பிறகு கபில், அசாருதீன், கங்குலி, டிராவிட் என வெவ்வேறு கேப்டன்கள் முயற்சித்தும், இந்திய அணிக்கு உலக கோப்பை எட்டாக் கனியாகவே இருந்தது. இந்திய ரசிகர்களின் இந்த உலக கோப்பை தாகம், 2011ல் எம்.எஸ்.தோனியின் மூலமாக தீர்ந்தது. சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் மீண்டும் உலக கோப்பையை தூக்கிக் கொண்டாடிய அந்த தருணம் நிகழ்ந்து… 12 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

இதுவரை நடந்துள்ள 12 உலக கோப்பை தொடர்களில், ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 5 முறை சாம்பியனாகி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இந்தியா தலா 2 முறை, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வசப்படுத்தி உள்ளன. தற்போது இந்தியா முதல் முறையாக தனித்தே நடத்தி வரும் உலக கோப்பை தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இந்தியா 3வது முறையாக சாம்பியனாகி சாதனை படைக்குமா? இல்லை… கங்காரு வயிற்றில் 6வது முறையாக கோப்பை தஞ்சம் அடையுமா என்பதை தீர்மானிக்கும் பரபர… விறுவிறு… பைனல் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நாளை நடக்கப்போகிறது.

வெல்லப்போவது தொடர்ச்சியாக 10 வெற்றிகளுடன் வீர நடை போடும் ரோகித் தலைமையிலான இந்திய அணியா? இல்லை தொடர்சியாக 8 வெற்றிகளை வசப்படுத்தி எழுச்சி கண்டுள்ள ஆஸ்திரேலியாவா? என்பதை கணிப்பது கடினம் என்றாலும், ரோகித் மற்றும் கோவுக்கு இதைவிட தங்கமான வாய்ப்பு வாய்க்காது என்பது மட்டும் நிஜம். கபில், தோனி வரிசையில் ரோகித்தும் இணைய வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பம்/எதிர்பார்ப்பு.

* 1983 இங்கிலாந்தின் லார்ட்ஸ் அரங்கில் நடந்த பைனலில் முதல் 2 தொடரிலும் சாம்பியன் பட்டங்களை வென்ற கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்தியா 54.4 ஓவரில் 183 ரன்னுக்கு சுருண்டது (அப்போது 60 ஓவர் கிரிக்கெட்). அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் 38 ரன் எடுத்தார். எளிய இலக்கு என்பதால் வெஸ்ட் இண்டீஸ் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய தாக்குதலில் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் 52வது ஓவரிலேயே ஆல் அவுட்டானது. மதன்லால், மொகிந்தர் அமர்நாத் தலா 3, பல்வீந்தர் சாந்து 2 விக்கெட் எடுத்தனர். இந்தியா 43 ரன் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது. ஆட்ட நாயகன்: மொகிந்தர் அமர்நாத் (1992ல் இருந்துதான் தொடர் நாயகன் விருது வழங்கப்படுகிறது)

* 2003 தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த பைனலில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி மோதியது. ஆஸி. 50 ஓவரில் 359/2 (கில்கிறிஸ்ட் 57, ஹேடன் 37, பான்டிங் 140*, மார்ட்டின் 88*). ஹர்பஜன் 2 விக்கெட் எடுத்தார். இந்தியா 39.2 ஓவரில் 234 ரன்னுக்கு ஆல் அவுட். சேவாக் 82, டிராவிட் 47 ரன் எடுத்தனர். ஆஸி. தரப்பில் மெக்ராத் 3, பிரெட் லீ, சைமண்ட்ஸ் தலா 2 விக்கெட் அள்ளினர். ஆஸி. 125 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 2வது முறையாகவும், மொத்தத்தில் 3வது முறையாகவும் உலக கோப்பையை ஊருக்கு கொண்டு சென்றது. ஆட்ட நாயகன்: ரிக்கி பாண்டிங் தொடர் நாயகன்: சச்சின் டென்டுல்கர்

* 2011 மும்பை வான்கடே அரங்கில் நடந்த பைனலில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியா – இலங்கை மோதின. இலங்கை தொடர்ந்து 2வது முறையாக (மொத்தத்தில் 3வது முறையாக) பைனலில் களம் கண்டது. முதலில் விளையாடிய சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது (ஜெயவர்த்தனே 103*). ஜாகீர்கான், யுவராஜ் சிங் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்தியா 48.2 ஓவரில் 6 விக்கெட் மட்டும் இழப்புக்கு 277 ரன் குவித்து 2வது முறையாக உலக கோப்பையை வென்றது (கம்பீர் 97, தோனி 91*, யுவராஜ் 21*). ஆட்ட நாயகன்: கேப்டன் தோனி தொடர் நாயகன்: யுவராஜ் சிங்

* இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
நடப்பு தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி , லீக் சுற்றில் எதிர்த்து விளையாடிய 9 அணிகளையும் துவம்சம் செய்து புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கம்பீரமாக அரையிறுதிக்கு முன்னேறியது. உலக கோப்பை நாக்-அவுட் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றையும் மாற்றி எழுதிய ரோகித் மற்றும் கோ, 4வது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது.

* ரன் குவிப்பில் கோஹ்லி (711 ரன், முதலிடம்), ரோகித் (550 ரன், 5வது இடம்), ஷ்ரேயாஸ் அய்யர் (526 ரன், 7வது இடம்) என டாப் 10ல் 3 வீரர்கள்.

* விக்கெட் வேட்டையில் முகமது ஷமி (6 போட்டியில் 23 விக்கெட், முதலிடம்), பும்ரா (10 போட்டியில் 18 விக்கெட், 5வது இடம்), ஜடேஜா (10 போட்டியில் 16 விக்கெட், 8வது இடம்) என டாப் 10ல் 3 பவுலர்கள்.

* வலுவான பேட்டிங் வரிசை, அமர்க்களமான பந்துவீச்சு கூட்டணி, சொந்த மண்ணில் விளையாடுவது, ரசிகர்களின் ஆதரவு என சாதகமான அம்சங்கள் அணிவகுப்பதால், ரோகித் தலைமையிலான இந்தியா 3வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

முன்னாள் கேப்டன்களுக்கு அழைப்பு
* அகமதாபாத்தில் நாளை நடக்க உள்ள பைனலை பார்க்க, உலக கோப்பையை வென்ற இந்திய அணி முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ், எம்.எஸ்.தோனி உள்பட அனைத்து அணிகளின் முன்னாள் கேப்டன்களுக்கும் ஐசிசி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் மோடி, ஆஸி. துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லெஸ், 8 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

* போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய விமானப் படையின் ‘சூரியா கிரண்’ குழுவினரின் சாகசம் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்த உள்ளது.

* பிரபல அல்பேனிய பாடகி துவா லிபா, இசையமைப்பாளர் பிரீதம் சக்ரவர்த்தி, பாடகர் ஆதித்யா காந்தவி இசை மழை பொழிய உள்ளனர்.

* முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின், சேவக், யுவராஜ், திரை நட்சத்திரங்கள் அமிதாப், ரஜினிகாந்த், கமல், மோகன்லால், வெங்கடேஷ், நாகார்ஜுனா, ராம்சரண் உள்பட பிரபலங்கள் பலரும் பைனலை பார்க்க நேரில் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* உலக கோப்பை பைனலையொட்டி அகமதாபாத்தில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post 3வது முறையாக உலக கோப்பையை தட்றோம்… தூக்குறோம்: ரோகித் மற்றும் கோவுக்கு தங்கமான வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : World Cup ,Rogit ,Gov. ,Rokit ,Goa ,Dinakaran ,
× RELATED யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய...