×

இன்று கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை வாங்க ஆர்வம்

புதுச்சேரி, நவ. 17: கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1ம் தேதி மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. பிறகு நடை மூடப்பட்டு மீண்டும் டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ம் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறுகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக நேற்று முதல் கடைகளில் துளசி மற்றும் முத்துமணி மாலைகளை வாங்குவதற்காகவும், பூஜை பொருட்களை வாங்கவும் கடைகளுக்கு ஆர்வமாக படையெடுத்தனர். இதனால் கடைகளில் ஐயப்ப மாலைகள், வேஷ்டி துண்டுகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்தது. தொடர்ந்து இன்று காலை கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.

The post இன்று கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை வாங்க ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Kartika ,Puducherry ,Sabarimala Ayyappan Temple ,Kerala ,Tamil Nadu ,Andhra ,Karnataka ,Karthighai ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்