×

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இலங்கை தொழிலதிபரை கடத்தி சித்ரவதை: பெண் உட்பட 4 பேர் கைது

திருவொற்றியூர், நவ.17: இலங்கையை சேர்ந்த கொட்டை பாக்கு விற்பனை செய்யும் தொழிலதிபர் முகமது சாம் என்பவரின் மகள், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை, கடந்த 13ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டு, எனது தந்தை முகமது சாம், வியாபார விஷயமாக கடந்த 8ம் தேதி சென்னை சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இந்நிலையில், என்னை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், ‘‘உனது தந்தையை கடத்தி வைத்துள்ளோம். நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் அவரை விடுவிப்போம்,’’ என மிரட்டல் விடுத்துள்ளார். எனவே, எனது தந்தையை மீட்டு தர வேண்டும், என தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து விசாரிக்க வடக்கு கடற்கரை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், துறைமுக உதவி ஆணையர் வீரகுமார் மேற்பார்வையில், வடக்கு கடற்கரை ஆய்வாளர் ராஜா சிங், உதவி ஆய்வாளர் பிரேம்குமார் மற்றும் போலீசார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதில், இலங்கை, கொழும்பு பகுதியை சேர்ந்த கொட்டை பாக்கு வியாபாரியும், தொழிலதிபருமான முகமது சாம்(48), கடந்த 11ம் தேதி மண்ணடியில் உள்ள ஒயிட் பேலஸ் என்ற தனியார் விடுதியில் தங்கி உள்ளார். அன்று இரவு விடுதியை காலி செய்துள்ளார். அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து அதன் அடிப்படையில்
தனிப்படை போலீசார் மண்ணடி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கோமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த சித்ரா(43), வேல் முருகன்(41), கே.கே.நகரை சேர்ந்த ரியா உதீன் அஸ்கர்(47), தினேஷ்(31) ஆகிய 4 பேரை நேற்று சுற்றி வளைத்து பிடித்து, அவர்களிடம் இருந்து முகமது சாமை மீட்டனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது சாம் வெளிநாட்டிலிருந்து கப்பல் மூலம் கன்டெய்னரில் கொட்டை பாக்குகளை சென்னைக்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு வரி கட்டுவதற்காக சுங்கவரி அலுவலகத்தில் கன்டெய்னர் நிறுத்தி வைக்கப்பட்டது. வரி செலுத்த முகமது சாமுக்கு பணம் தேவைப்பட்டதால், நண்பர்கள் உதவியுடன் சித்ராவிடம் பணம் கேட்க சென்றுள்ளார். இவர், ஏற்கனவே சித்ராவிடம் இருந்து வாங்கிய பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்த நிலையில், மீண்டும் பணம் கேட்டு வந்ததால், ஆத்திரமடைந்த சித்ரா, வேல்முருகன், ரியா உதீன் அஸ்கர், தினேஷ் ஆகியோர் உதவியுடன் முகமது சாமை கடத்தி சித்ரவதை செய்ததுடன், அவரது மகளிடம் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. தொலைபேசியில் வந்த புகாரை வைத்து கடத்தப்பட்ட தொழிலதிபரை உடனடியாக மீட்ட தனிப்படை போலீசாரை மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டினார்.

The post பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இலங்கை தொழிலதிபரை கடத்தி சித்ரவதை: பெண் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvottiyur ,Mohammad Sam ,Chennai ,
× RELATED ‘’தியாகராயா அரோகரா’’ பக்தி...