×

வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் பவனி இன்று காலை கொடியேற்றம் திருவண்ணாமலை தீபத்திருவிழா எல்லை தெய்வ வழிபாடு நிறைவாக

திருவண்ணாமலை, நவ. 17: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா எல்லை தெய்வ வழிபாட்டின் நிறைவாக நேற்று வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடந்தது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அண்ணாமலையார் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி, தீபத்திருவிழாவின் தொடக்கமாக கடந்த மூன்று நாட்களாக எல்லை காவல் தெய்வ வழிபாடு நடந்தது. எந்த தடையும் இல்லாமல், விழா சிறப்பாக நடைபெற வேண்டி இந்த வழிபாடு நடப்பது வழக்கமாகும். அதன்படி, முதல் நாளான்று துர்க்கையம்மன் உற்சவமும், இரண்டாம் நாளன்று பிடாரியம்மன் உற்சவமும் நடந்தது. காமதேனு, சிம்ம வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

எல்லை வழிபாட்டின் நிறைவு நாளான நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர், அலங்கார ரூபத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் உடன் வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரம் விழாகோலமாக காட்சியளிக்கிறது. கோயில் கோபுரங்கள் வண்ண சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குவதை முன்னிட்டு, கோயில் பிரகாரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. கோயில் மற்றும் மாட வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் பவனி இன்று காலை கொடியேற்றம் திருவண்ணாமலை தீபத்திருவிழா எல்லை தெய்வ வழிபாடு நிறைவாக appeared first on Dinakaran.

Tags : Vinayagar Bhavani ,Tiruvannamalai Deepatri Vizah ,Thiruvannamalai ,Ganesha ,Silver ,Tiruvannamalai Kartikai Deepatri Festival Border Deity Worship ,
× RELATED குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு...