×

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் நேரடி ஆய்வு பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த உத்தரவு திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, நவ.17: திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை தரிசிக்க வரும் பக்தர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும் என ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, வரும் 26ம் ேததி மகா தீப பெருவிழா நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். இந்நிலையில், தீபத்திருவிாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ளப்படும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். மேலும், பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கும் நடைமுறைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுதல் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ், அறநிலையத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, எஸ்பி கார்த்திகேயன், நகராட்சித் தலைவர் நிர்மலாவேல்மாறன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணிகலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: கடந்த ஆண்டு தீபத்திருவிழாவில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பாதுகாப்பாக திரும்பினர். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதற்கு தீபத்திருவிழாவே சாட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். ஊர்கூடி தேர் இழுப்பதை போல, அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான்தான் சிறப்பாக நடத்திட முடியும். இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எவவே, எவ்வித சிறு குறைகளும் இல்லாமல் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.

மலைமீது நெய் காணிக்கை செலுத்த செல்லும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு குடிநீர் பாட்டில் விற்பனை போன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். அதேபோல், அன்னதானம் வழங்குவோரை முறைப்படுத்தி, சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். சிறு சிறு தவறுகளையும் சமூக வலைதளத்தில் பெரிதாக்கவிடுவார்கள். கவனத்துடன் செயல்படுவது அவசியம். மலை மீது பட்டாசு வெடிப்பது போன்றவற்றால் ஏற்படும் தீவிபத்துக்களை தவிர்க்க வேண்டும். கிரிவலப்பாதையில் உள்ள காவல் உதவி மையங்கள் அனைத்து நாட்களிலும் செயல்பட வேண்டும்.

மாட வீதியில் கான்கிரீட் சாலை 1000 மீட்டர் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தீபத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும். மாட வீதி, கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரிமிப்புகளை அகற்ற வேண்டும். அதே நேரத்தில், நடைபாதைகளில் வியாபாரம் செய்வோரின் வாழ்வாதாரம் பாதிக்காதபடி, அவர்களுக்கு தேவையான மாற்று இடத்தை அதிகாரிகளே ஒதுக்கித்தர வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். எனவே, காவல்துறை சிறப்பாக பணியாற்ற வேண்டும். கோயில் பிரகாரத்துக்குள் மகாதீபத்தன்று தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில் போலீசார் செல்வதை தவிர்த்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு தேவையான பணிகளில் ஈடுபட வேண்டும்.

தீபத்திருவிழாவுக்கு ஒரு காலத்தில் சில ஆயிரம் பக்தர்கள் மட்டுமே பங்கேற்ற நிலை மாறி, இப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், கோயில் உள் பிரகாரத்தின் பரப்பளவு இப்போதும் அதே அளவில்தான் உள்ளது. எனவே, போலீசார் தங்களது நுண்ணறிவை பயன்படுத்தி, சிறப்பாக பணியாற்ற வேண்டும். கிரிவலப்பாதையில் பக்தர்கள் எனும் போர்வையில் நடைபெறும் தவறுகளை தடுக்க வேண்டும். ஒருசிலர் சாமியார்கள் என்று கூறி பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். விபூதி என சொல்லி சுண்ணாம்பு பூசுகின்றனர். கோயில் திருப்பணி என பணம் வசூலிக்கின்றனர். கிரிவலப்பாதையில் 75க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோல் நடப்பதாக தகவல் வந்திருக்கிறது. எனவே, உண்மையான சாமியார்களுக்கு ஏற்கனவே அடையாள அட்டை வழங்கியிருக்கிறோம். எனவே, மோசடி செய்யும் நபர்களை அடையாளம் கண்டு, அப்புறப்படுத்த வேண்டும். திருப்பணியில் ஈடுபடும் கட்டளைதாரர்கள், உபயதாரரர்கள் கோயிலுக்குள் அனுமதிக்க பாஸ் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ேபசியதாவது: அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்புடையது என்பதால் அதை அப்படியே வழிமொழிகிறேன். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் தீபத்திருவிழா சிறப்போடு இருக்க வேண்டும் துரிதமான நடவடிக்கைகளை மேற்ெகாள்கிறோம். அதிகபடியான பாஸ்கள் விநியோகிக்க கூடாது என கட்டுப்பாடு விதித்திருக்கிறோம். பொதுமக்கள் சிறப்போடு தரிசனம் செய்ய அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறோம். கடந்த ஆண்டு நடந்த சிறுசிறு பிரச்சனைகளும் இந்த ஆண்டு நடைபெறாமல் தவிர்த்து, சிறப்புடன் விழாவை நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

சிறு அசம்பாவிதமும் நடைபெறாமல் விழாவை நடத்துவதில் நம் அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், டிஆர்ஒ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலைத்தறை முதன்மை பொறியாளர் சந்திரசேகரன், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிபிரியா, கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், பிரியாவிஜயரங்கன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட கவுன்சிலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் நேரடி ஆய்வு பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த உத்தரவு திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.

Tags : Karthikai Deepa festival ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Deepa festival ,
× RELATED நரி தலையை வைத்து வித்தை காட்டிய...