×

கீழக்கரை, ஏர்வாடி பகுதி கடற்கரை கிராமங்களில் அரசு செயலர் ஆய்வு

கீழக்கரை, நவ.17: கீழக்கரை கடற்கரையையொட்டி உள்ள தாழ்வான பகுதிகளில் மக்கள் வசித்து வரும் கிராமங்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன், அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் ஆய்வு செய்தனர். திருப்புல்லாணி அருகே இந்திரா நகர், குருவிக்காரன் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர். மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வாய்க்கால்களை சீரமைத்து, குடிநீர், மருத்துவ வசதி வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தினார்.

ஏர்வாடி தர்ஹா அருகே கடற்கரைக்கு மிக அருகே உள்ள சடையன்முனியன் வலசை கிராமம் தாழ்வான பகுதியாக உள்ளதால் பேரிடர் காலத்தில் தண்ணீர் தேங்கும்போது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தனர். ஆயிரம் பேர் தங்கும் வசதி கொண்ட கல்பார் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டனர். அங்கு ஆயிரம் பேர் தங்கும் அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதை பார்வையிட்டார்.

இதேபோல் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருக்க வேண்டுமென அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் கேட்டுக்கொண்டார். பனைக்குளம் ஊராட்சியில் தொடர் மழையால் வீடு முழுமையாக பாதித்த வள்ளி குடும்பத்திற்கு அரசு நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் 10 கிலோ அரிசி, சேலை ஆகியவற்றை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, கோட்டாட்சியர் கோபு, கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

The post கீழக்கரை, ஏர்வாடி பகுதி கடற்கரை கிராமங்களில் அரசு செயலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Lower Bank, Airwadi Area ,Keezhakarai ,Collector ,Vishnushandran ,
× RELATED இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கல்...