×

காதலிக்க மறுத்த மாணவிக்கு அரிவாள் வெட்டு: தாய் படுகாயம்

 

சமயபுரம், நவ.17: சிறுகனூர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயை அரிவாளால் வெட்டிய காதலன், தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முசிறி கல்லூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (19). இவரும் சிறுகனூர் பக்கமுள்ள 17 வயது பெண்ணும் புத்தனாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். சண்முகவேல் சனமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் பாடலூரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும்போதே இருவருக்கும் பழக்கம் இருந்து, நாளடைவில் அது காதலாக மாறியது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுகனூர் அருகே நடைபெற்ற விவசாய சங்கத் தலைவர் கொலையில் சண்முகவேல் மீதும் வழக்கு உள்ளது. இதனை அறிந்த கல்லூரி மாணவி இவருடைய நடவடிக்கை பிடிக்காதால் அவரை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சண்முகவேல் காதலியின் வீட்டுக்கு சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.

அப்போது அவரை காதலி திட்டி அனுப்பினாராம். இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் தான் கொண்டு வந்த அரிவாளால் கல்லூரி மாணவியின் தலை மற்றும் கையில் வெட்டியுள்ளார். அதை கண்ட அவரது தாய் சத்யா ஓடி வந்து காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து தனது வீட்டிற்கு திரும்பிய சண்முகவேல் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சத்யா சிறுகனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் சண்முகவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதலிக்க மறுத்த மாணவிக்கு அரிவாள் வெட்டு: தாய் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Sirukanur ,
× RELATED சமயபுரம் மாரியம்மன் வழிபாடு