×

அமெரிக்கா- சீனா இடையே மீண்டும் ராணுவ தொடர்பு: அதிபர்கள் பைடன் -ஜீ ஜின் பிங் ஒப்புதல்

உட்சைட்: அமெரிக்கா மற்றும் சீனா இடையே ராணுவத்தொடர்புகளை மீண்டும் தொடங்குவதற்கு இரு நாட்டு அதிபர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஜீ ஜின்பிங் தனியாக சந்தித்து பேசினார். ஒரு ஆண்டுக்கு பின் இருநாட்டு அதிபர்களும் சந்தித்துக்கொண்டனர். சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சுமார் 40கி.மீ. தூரத்தில் உள்ள பிலோலி எஸ்டேட்டில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டுக்கும் இடையே ராணுவ தொடர்புகளை மீண்டும் தொடங்குவது, போதைப்பொருள் எதிர்ப்பில் ஒத்துழைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதத்தை தொடங்குவதற்கு இரு நாட்டு அதிபர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்களும் ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றதை அடுத்து அமெரிக்கா- சீனா இடையேயான ராணுவ தொடர்பு துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘‘நாங்கள் நேரடியான திறந்த, தெளிவான தகவல் தொடர்புகளுக்கு மீண்டும் திரும்பியுள்ளோம். அமெரிக்காவும், சீனாவும் தங்களின் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எது பயனுள்ளது, எது பயனற்றது, எது ஆபத்தானது மற்றும் எது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதை தீர்மானிப்பதற்காக சரியான திசையில் இவை உறுதியான படிகளாகும். தகவல் தொடர்பு இல்லாததால் எவ்வாறு விபத்துக்கள் நிகழ்கின்றன என்பதை உடனடியாக அறிய முடிவதில்லை. இனி இரு நாட்டு அதிபர்களும் தொலைபேசியை எடுத்து உடனடியாக பேச முடியும். சமீப காலமாக பதற்றத்தை ஏற்படுத்திய விவகாரங்களில் இருதரப்பும் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன” என்றார்.

* சீன அதிபர் சர்வாதிகாரியா?
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீன அதிபர் ஜீ ஜீன்பிங்கை அமெரிக்க அதிபர் பைடன் சர்வாதிகாரி என்று விமர்சித்ததை செய்தியாளர்கள் நினைவு கூர்ந்தனர். இதற்கு பதிலளித்த அதிபர் பைடன்,‘‘நான் என்ன சொல்கிறேன் என்றால் அவர் ஒரு சர்வாதிகாரி உணர்வை கொண்டவர். அவர் ஒரு கம்யூனிச நாட்டை ஆளும் இளைஞர், நம்மைவிட மாறுபட்ட அரசாங்கத்தின் வடிவத்தை அடிப்படையாக கொண்டது. எப்படியோ நாங்கள் இருதரப்பு உறவில் முன்னேறிவிட்டோம்” என்றார்.

The post அமெரிக்கா- சீனா இடையே மீண்டும் ராணுவ தொடர்பு: அதிபர்கள் பைடன் -ஜீ ஜின் பிங் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : US ,China ,Presidents ,Biden-Jie Jin Ping ,Asia ,Pacific ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்...