×

இந்தியாவின் தொடர் வெற்றிகளால் திராவிட் மாடல் தொடரும்

இந்த உலக கோப்பையுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் உள்ளிட்ட பயிற்சி ஊழியர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. ஒருவேளை அரையிறுதியில் இந்திய அணி தோற்று இருந்தால் அந்த முடிவில் மாற்றம் இருந்திருக்காது. ஆனால் பயிற்சியாளர் ராகுல் ‘திராவிட் மாடல்’ யோசனைகளால் இந்த தொடர் முழுவதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி இந்தியா மட்டும்தான். இந்த தொடரில் இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றியை ருசித்துள்ளது. அதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற பதவியில் திராவிட் தொடருவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

பைனல் வரை அழைத்து வந்த பயிற்சியாளரை மாற்றுவது தேவையற்ற விமர்சனங்களை தான் ஏற்படுத்தும். எனினும் பயிற்சியாளர் பதவியில் தொடர திராவிட் விரும்புவாரா என்ற சந்தேகமும் உள்ளது. பயிற்சியாளர் பதவியில் திராவிட் தொடர விரும்பினால் அதை பிசிசிஐயால் நிராகரிக்க முடியாது. அதே நேரத்தில் திராவிட் தொடராவிட்டாலும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் ஆகியோருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கும் வாய்ப்பு அதிகம். இந்நிலையில் உலக கோப்பைத் தொடருக்கு பிறகு நவ.23ம் தேதி முதல் டிச.3ம் தேதி வரை இந்தியா-ஆஸி இடையிலான டி20 தொடர் தொடங்குகிறது. மொத்தம் 5 ஆட்டங்களை கொண்ட இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் பணியாற்ற உள்ளார். அதே நேரத்தில் டி20 தொடருக்கான இந்திய அணியை உலக கோப்பை பைனலுக்கு பிறகு பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* உலக கோப்பையை வென்றவர்
திராவிட் 2014ம் ஆண்டு பயிற்சி களத்துக்குள் நுழைந்தார். முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வழிகாட்டியாக இருந்தார். தொடர்ந்து இந்தியாவின் யு-19அணியின் பயிற்சியாளராக 2015ல் நியமிக்கப்பட்டார். அதனையடுத்து யு-19 உலக கோப்பையில் இந்திய அணியை இறுதி ஆட்டம் வரை முன்னேற வைத்தார். தொடர்ந்து 2018ம் ஆண்டு நடந்த யு1-9 உலக கோப்பையை திராவிட் பயிற்சியின் கீழ் இந்தியா வென்றது. அதன்பிறகு 2021ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

The post இந்தியாவின் தொடர் வெற்றிகளால் திராவிட் மாடல் தொடரும் appeared first on Dinakaran.

Tags : Dravid ,India ,World Cup ,Rahul Dravid ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...