×

அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம் மகாதீப தரிசனத்தன்று விஐபி பாஸ் கிடையாது: ஆய்வுக்கு பின் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாதீப தரிசனத்தன்று விஐபி பாஸ் கிடையாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் 7ம் நாளான வரும் 23ம் தேதி மகா தேரோட்டம் நடைபெற உள்ளது. நிறைவாக, 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். இவ்விழாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று முன்தினம் டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை 9 மணியளவில் திருவண்ணாமலை கோயிலில் ராஜகோபுரம், 3, 4, 5வது பிரகாரங்களில் ஆய்வு செய்தார். பின்னர் அன்னதானம் வழங்கும் பகுதியை ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான விரிவான முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். கடந்தாண்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீதம் பக்தர்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்கு தகுந்தபடி விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். மகா தீப திருவிழாவின்போது, கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு விஐபி பாஸ் வழங்கப்படாது. வழக்கம்போல, கட்டளைதாரர் உபயதாரர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்படும். கடந்தாண்டு பரணி தீபத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்திற்கு சுமார் 7,500 பக்தர்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டும் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு அதே எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிக்க திட்டமிட்டு இருக்கிறோம். போலி பாஸ் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், நாள் முழுவதும் அன்னதான திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பக்தர்கள் மனம் திறந்து பாராட்டுகின்றனர். திருப்பதியில் உள்ளது போல, காலை சிற்றுண்டி மற்றும் மாலை சிற்றுண்டி அன்னதானத் திட்டமும் இக்கோயிலில் வழங்குவதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க சன்னதிகளில், அன்னதான திட்டம் நடைமுறைப்படுத்தும் சாத்தியங்களும் ஆராயப்படும். பக்தி பசியோடு ஒரு இடத்திற்கு வயிற்று பசியோடுசெல்லக்கூடாது என்பது தான் முதல்வரின் எண்ணம். திருவண்ணாமலையில் அறநிலையத்துறை சார்பில் இலவச தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயப்படும். இவர் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசைன கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையி, ‘மலை மீது பட்டாசு வெடிப்பது போன்றவற்றால் ஏற்படும் தீவிபத்துக்களை தவிர்க்க வேண்டும். கிரிவலப்பாதையில் உள்ள காவல் உதவி மையங்கள் அனைத்து நாட்களிலும் செயல்பட வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். எனவே, காவல்துறை சிறப்பாக பணியாற்ற வேண்டும். கிரிவலப்பாதையில் பக்தர்கள் எனும் போர்வையில் நடைபெறும் தவறுகளை தடுக்க வேண்டும். கோயில் திருப்பணி என பணம் வசூலிக்கின்றனர். மோசடி நபர்களை அப்புறப்படுத்த வேண்டும்’ என்றார்.

* போலி பாஸ்களை தடுக்க ‘சிப்’ பொருத்தப்பட்ட பாஸ்
மகா தீபத்தன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்படும் பரணி தீபத்தை தரிசிக்கவும், மாலையில் மகா தீபத்தை தரிசிக்கவும் கோயிலுக்குள் செல்ல வழக்கம் போல இந்த ஆண்டும் கட்டளைதாரர் உபயதாரர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்படுகிறது.அனுமதி அட்டையில் போலிகள் நுழைவதை தடுக்க, இந்த ஆண்டு சிப் பொருத்தப்பட்ட அனுமதி அட்டையை கோயில் நிர்வாகம் வடிவமைத்துள்ளது. அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலில், அனுமதி அட்டையை ஸ்கேன் செய்த பிறகே, அனுமதிக்கப்படுவார்கள். அதன்மூலம், போலி அனுமதி அட்டைகள் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

* புதிய கான்கிரீட் சாலையில் வெள்ளோட்டம்
தீபத்திருவிழாவின் 7ம் நாளான வரும் 23ம் தேதி மகா தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், மாட வீதி கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கான்கீரிட் சாலையில் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

* மலையேற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபப்பெருவிழா வரும் 26ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மலைமீது ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிப்பதற்காக மலையேற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

* மகாதீபம் ஏற்ற ரூ.34 லட்சத்தில் 4,500 கிலோ நெய்
2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்துக்காக 4,500 கிலோ நெய், மற்றும் ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திடம் இருந்து 4,500 கிலோ முதல்தர அக்மார்க் நெய், ரூ.34 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 15 கிலோ எடையுள்ள 300 டின்களில் வழங்கப்பட்டுள்ள முதல் தர அக்மார்க் முத்திரை பதித்த ஆவின் நெய், அண்ணாமலையார் கோயில் மடப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கொப்பரை, கடந்த 2021ம் ஆண்டு பக்தர் ஒருவரால் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. அந்த கொப்பரை தொடர்ந்து இந்த ஆண்டும் பயன்படுத்தப்படுகிறது. பக்தர்கள் நெய் காணிக்கையை ரொக்கமாக செலுத்தவும், நெய்யாக நேரில் செலுத்தவும் சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருக்கிறது. அதன்படி, ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ. 150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தலாம்.

The post அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம் மகாதீப தரிசனத்தன்று விஐபி பாஸ் கிடையாது: ஆய்வுக்கு பின் அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar temple Dipa festival ,Mahadeepa ,Minister ,Shekharbabu ,Thiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar temple ,Thiruvannamalai… ,Mahadeepa darshan ,
× RELATED ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர்,...