×

பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் பெரிய வெங்காயம் விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் ‘பெரிய வெங்காயம்’ இந்த மாதம் இறுதி வரை விற்கப்படும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். கூட்டுறவுத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு செய்யப்பட்ட 32 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் (கிரேடு-3) மற்றும் தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு பணி ஆணைகளை வழங்கினார். அப்போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டி: தமிழகத்தில் 38 மாவட்டங்களில் விற்பனையாளர்கள், கட்டுனர்கள் பணிக்காக 5,500 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. அதில் நாலரை லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். மூன்றே முக்கால் லட்சம் பேர் நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டனர். 36 மாவட்டங்களில் அந்த பணி சிறப்பாக முடிந்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற பணி நியமன பணிகள் நடந்த நேரத்தில் குறைகள் ஏற்பட்டது. அப்போது மாவட்டம் பிரிக்கப்படாமல், முழுமையான விழுப்புரம் மாவட்டமாக இருந்தது.

அது சம்பந்தமான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. மாவட்ட வாரியாக, கூட்டுறவு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் மூலமாக அந்த தேர்வுகள் நடைபெறுவதற்கான அறிவிப்புகள் ஒளிவுமறைவின்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 65 லட்சம், 70 லட்சம் பேர் பதிவு செய்திருந்தாலும்கூட அவர்களும் இந்த தேர்வுகளில் கலந்துகொள்ளலாம். இன்னும் அந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும் கலந்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு என்பதை அவர் புரியாமல் (பாஜ தலைவர் அண்ணாமலை) சொல்லியிருக்கிறார்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்களும் இந்த தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். எந்தவிதமான தடையும் இல்லை. பதிவு செய்யாதவர்களும் கலந்து கொள்ளலாம். எல்லோருக்குமான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. பசுமைக் கடை, அமுதம் சிறப்பங்காடி மற்றும் மொபைல் ஷாப் போன்ற கடைகளில் குறைந்த விலையில் பெரிய வெங்காயம் ஒரு சோதனை அடிப்படையில் விற்கப்படுகிறது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் வெங்காயம் கிடைக்க செய்தால் விலை சற்று ஏறக்குறைய நிலைப்படுத்த முடியும். தற்போது அது தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. இந்த மாத இறுதிவரை தொடர்ந்து குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் பெரிய வெங்காயம் விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,Chennai ,
× RELATED கூட்டுறவு சங்கங்களில் நிலுவைக்கடன்...