×

10 மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில் நாளை சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்: மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டம், ஒப்புதல் தர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் கவர்னர்

சென்னை: உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதையடுத்து இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நாளை நடைபெறும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால், அதற்கு கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளார். தமிழ்நாடு அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலதாமப்படுத்தி வந்தார்.

இது சட்டவிரோதம் என அறிவிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 6ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வு ஆளுநரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பும்போது, அதில் உடனுக்குடன் முடிவெடுக்க வேண்டியதுதானே? ஏன் இந்த காலதாமதம். ஆளுநருக்கு சில அதிகாரங்கள் இருந்தாலும் மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குபவராக கவர்னர் இருக்க வேண்டும். அரசின் அதிகாரத்தை ஆளுநர் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யாமல் காலவரையின்றி மசோதாக்களை கிடப்பில் போட முடியாது. மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தர வேண்டும்” என்று கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த வழக்கு மீண்டும் வருகிற 20ம் தேதி (திங்கள்) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பி உள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையிலும், வழக்கு விசாரணை வருகிற 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், தன்னிடம் நிலுவையில் உள்ள 10 மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 10 மசோதாக்களில் பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கே வழங்கும் மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்கும் மசோதா ஆகியவை முக்கியமானதாகும். இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கே அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன்படி நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெறும் என்று தமிழக சபாநாயகர் அப்பாவு நேற்று அறிவித்தார்.

இந்த அவசர கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை உடனடியாக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்திருந்தார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து, டெல்லிக்கு அனுப்பி வைத்தார். நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றியதுபோலவே தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களையும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

‘‘ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்’’ என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.  இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பினால், அதற்கு ஒப்புதல் அளிப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* நிலுவையில் இருந்த மசோதாக்கள்
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதா நிலுவையில் உள்ளது. அதேபோன்று, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சி குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா,

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல், தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்டம்,எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, டாஸ்மாக் நிறுவன விற்று முதலுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதா, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்தம், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் 3வது சட்டத்திருத்தம், 4வது சட்டத்திருத்தம் தொடர்பான மசோதாக்கள், தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் சட்டத்திருத்த மசோதா,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, பழைய சட்டங்களை நீக்க வழிசெய்யும் மசோதா, போதைப்பொருள், வனம், சைபர் சட்டம், குற்றவாளிகள் தங்கள் உறவினர் இறப்புக்கு செல்ல அனுமதிப்பது தொடர்பான திருத்த மசோதா, தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சார்பில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது தொடர்பான மசோதா ஆகியவை ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.

* ‘ஒப்புதல் தந்தே தீர வேண்டும்’
தமிழக சபாநாயகர் அப்பாவு நேற்று திருவண்ணாமலையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று அரசு விரும்புகிற காரணத்தினால் 18ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் நீதிமன்றம் பற்றியோ, ஆளுநர் பற்றியோ அல்லது குடியரசு தலைவர் பற்றியே விவாதிக்கப்பட மாட்டாது. அவசர சட்டமன்ற கூட்டம் நாளை கூடுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

ஏதேனும் குறைகள் இருந்தால் திருப்பி அனுப்பலாம். இப்போது திருப்பி அனுப்பி இருக்கிறார். ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை திருப்பி அனுப்பினால், அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் நிச்சயமாக அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டம், நீட் போன்ற மசோதாக்கள் திரும்ப அனுப்பப்பட்டு, அது மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை குடியரசு தலைவருக்கு அனுப்பினார். கல்வி மாநில பட்டியலில் இருந்தது. அது இப்போது பொது பட்டியலுக்கு போய்விட்டது.

சட்டமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டு, இறையாண்மையுடன் செயல்படுகிறது. தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய கருத்துக்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. அதை குடியரசு தலைவரோ, ஒன்றிய அரசோ கண்டிப்பாக பரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வதற்கு முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100 சதவீதம் உரிமை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* அதிமுக ஆட்சி கால மசோதாக்கள்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நிறைவேற்றிய தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் திருத்தம் மசோதாக்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது.

The post 10 மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில் நாளை சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்: மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டம், ஒப்புதல் தர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் கவர்னர் appeared first on Dinakaran.

Tags : Legislative Assembly ,Tamil Nadu government ,Governor ,Chennai ,Supreme Court ,Governor RN ,Ravi ,Assembly ,Dinakaran ,
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...