×

தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து!!

சென்னை: தேசியப் பத்திரிகையாளர்கள் தினத்தை ஒட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில், “உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர், எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், #தேசியபத்திரிகைதினத்தில் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள். வலுவான, வளமான குடிமக்களை மையமாகக் கொண்ட ஜனநாயகத்தை கட்டியெழுப்ப சுதந்திரமான மற்றும் நியாயமான ஊடகம் முக்கியமானது. அந்த பெரும் எதிர்பார்ப்புடன் ஊடகவியலாளர்களை தேசம் எதிர்நோக்குகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சனநாயகமும் பத்திரிகைத்துறையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற பல தலைவர்கள் தங்கள் புரட்சிகர கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல பத்திரிகைத்துறையை பயன்படுத்தியவர்கள். கடைசி மனிதனுக்கும் நடக்கும் அநீதியை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒளியாக பத்திரிகையும் ஊடகமும் இருக்க வேண்டும். சனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்கள் என்றைக்கும் அறம் சார்ந்து பயணிக்க வேண்டும் என்று தேசிய பத்திரிகையாளர் நாளில் வேண்டுகோள் விடுக்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : National Press Day ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,National Journalists' Day ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...