×

கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி நேரில் ஆய்வு குற்றங்களை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, நவ.16: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேரடி ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா நாளை(17ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து விழாவின் நிறைவாக வரும் 26ம் தேதி மகாதீப பெருவிழாவும் நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும். இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவில் இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, இதுவரை எப்போதும் இல்லாத அளவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதையொட்டி, தீபத்திருவிழாவுக்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அண்ணாமலையார் கோயில் வெளி பிரகாரம், ராஜகோபுரம், உட்பிரகாரங்கள், தீபதரிசன மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். மேலும், மகா தீபத்தன்று பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளும் 3ம் பிரகாரம், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க திட்டமிட்டுள்ள நுழைவு வாயில்களில், எத்தனை பத்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வாய்ப்பு உள்ளது, அதற்கான இட வசதி, பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

முன்னதாக, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் தீபத்திருவிழா பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தீபத்திருவிழாவுக்கு இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவில் பக்தர்கள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என தகவல் கிடைத்திருக்கிறது. அதனால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பு பணியில் சுமார் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதால், அவர்களுக்கான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு, அதனை கண்காணிக்க எஸ்பிக்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். குறிப்பாக, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றங்கள் ஏற்படுவதை தடுக்கவும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும், நகரின் அனைத்து பிரதான சாலைகளிலும் செக்போஸ்ட் அமைத்து, வாகனங்களை கண்காணிக்க வேண்டும். நகருக்குள் கனரக வாகனங்களை அனுமதிக்காமல் தடுக்க வேண்டும். கார், வேன் போன்ற பக்தர்களின் வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு போட வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ஆய்வின்போது, வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணை ஆணையர் ஜோதி மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி நேரில் ஆய்வு குற்றங்களை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : DGP ,Karthikai Deepatri ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Thiruvannamalai ,Tamil Nadu ,Shankar Jiwal ,Tiruvannamalai Karthikai Deepatri ,Tiruvannamalai… ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...