×

பெண் நிருபரிடம் அத்துமீறல் நடிகர் சுரேஷ் கோபியிடம் போலீசார் விசாரணை: தொண்டர்கள் புடைசூழ வந்ததால் பரபரப்பு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரும், பாஜ முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ் கோபி கடந்த மாதம் 27ம் தேதி கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேள்வி கேட்ட ஒரு மலையாள தனியார் டிவி பெண் நிருபரின் தோளில் அவர் திடீரென கை வைத்தார். அந்த நிருபர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் மீண்டும் அவரது தோளை சுரேஷ் கோபி தொட்டார். இது குறித்து பெண் நிருபர் கோழிக்கோடு போலீசிலும், மகளிர் ஆணையத்திலும் புகார் செய்தார். இதற்கிடையே நடந்த சம்பவத்திற்கு நடிகர் சுரேஷ் கோபி அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் கோழிக்கோடு நடக்காவு போலீசார் சுரேஷ் கோபி மீது இபிகோ 354 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் வரும் 18ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி சுரேஷ் கோபிக்கு நடக்காவு போலீசார் நோட்டீஸ் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை நடிகர் சுரேஷ் கோபி நடக்காவு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். முன்னதாக போலீஸ் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலிருந்து அவர் நூற்றுக்கணக்கான பாஜ தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டார். இதில் பாஜ மாநில தலைவர் சுரேந்திரன் மற்றும் ஷோபா சுரேந்திரன், எம்.டி. ரமேஷ், கிருஷ்ணதாஸ் போன்ற மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையத்தில் ஆஜரான சுரேஷ் கோபியிடம் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 2.15 மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு அவரை அனுப்பி வைத்தனர்.

The post பெண் நிருபரிடம் அத்துமீறல் நடிகர் சுரேஷ் கோபியிடம் போலீசார் விசாரணை: தொண்டர்கள் புடைசூழ வந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Suresh Gopi ,Thiruvananthapuram ,BJP Rajya Sabha ,Kozhikode ,
× RELATED பெண் நிருபரிடம் அத்துமீறல்; சுரேஷ்...