×

நாளை வாக்குப்பதிவு மபி, சட்டீஸ்கரில் பிரசாரம் ஓய்ந்தது

போபால்: மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் அனல்பறந்த தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. மபியில் ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் 2ம் கட்ட வாக்குப்பதிவும் நாளை நடக்க உள்ளது. மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் முதலில் மிசோரமில் ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதி நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து 230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேசத்தில் ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் 2வது மற்றும் கடைசி கட்டமாகவும் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இதையொட்டி இரு மாநிலங்களிலும் நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. மபியில் ஆளும் பாஜவை எதிர்த்து, காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. ஆனாலும் பாஜ, காங்கிரஸ் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. மபியில் ஆட்சியை தக்க வைக்க பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து 9 முறை மபிக்கு வந்த அவர் 14 பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பொதுக்கூட்டத்திலும், இந்தூரில் சாலை பேரணியிலும் பங்கேற்றார்.

பாஜ சார்பில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பாஜ தேசிய தலைவர் நட்டா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரம் செய்துள்ளனர். காங்கிரஸ் தரப்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்துள்ளனர். தேர்தலுக்காக 2,049 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,533 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 5 கோடியே 60 லட்சத்து 60 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதில் 2 கோடியே 88 லட்சத்து 25 ஆயிரத்து 607 பேர் ஆண்கள், 2 கோடியே 72 லட்சத்து 33 ஆயிரத்து 945 பேர் பெண்கள், 1,373 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும். கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 114 தொகுதிகளை வென்று சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், சுயேச்சைகள் உதவியுடன் ஆட்சி அமைத்த போதிலும், 2020ல் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜவுக்கு தாவியதால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

சட்டீஸ்கரிலும் தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. 22 மாவட்டங்களில் உள்ள 70 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் 61 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நக்சல் பாதிப்புள்ள 9 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இங்கு 2ம் கட்ட தேர்தலில் 958 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 18,833 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கும் ஆளும் காங்கிரஸ், பாஜ இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

* அதிகளவில் பணம் பறிமுதல்

தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகப்படியான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் நிதின் குப்தா தெரிவித்துள்ளார். குறிப்பாக ராஜஸ்தானில் கடந்த 2021ல் ரூ.322 கோடியும் 2022ல் ரூ.347 கோடியும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கடந்த அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ரூ.1,021 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடப்பதை ஒட்டி வருமான வரித்துறையும் தனது கண்காணிப்பை 5 மாநிலங்களில் தீவிரப்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

The post நாளை வாக்குப்பதிவு மபி, சட்டீஸ்கரில் பிரசாரம் ஓய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Bhopal ,Chhattisgarh, ,Madhya Pradesh ,Mabi ,Dinakaran ,
× RELATED உணவை டெலிவரி செய்ய வந்தவருக்கு...