×

புதுச்சேரி அரசு விழாவில் பரபரப்பு தரையில் அமர்த்தப்பட்ட பழங்குடி மக்கள் கவர்னர், முதல்வரிடம் வாக்குவாதம்: பழங்குடியினர் பெருமை தினத்தில் அவமதிப்பு

புதுச்சேரி: பழங்குடியினர் பெருமை தினத்தில் கவர்னர், முதல்வர் முன்னிலையில் தரையில் பழங்குடியின மக்கள் அமரவைக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பழங்குடியினர் பெருமை தினத்தையொட்டி வளர்ச்சியடைந்த பாரத பயணத்தை பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் துவக்கி வைத்தார். இதன் துவக்க விழாவின், நேரலை நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், செல்வகணபதி எம்பி, தலைமை செயலர் ராஜீவ் வர்மா, ஆதிதிராவிடர் துறை செயலர் கேசவன், ஆட்சியர் வல்லவன், ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பழங்குடியின மக்களை கவுரவிக்கும் விழாவுக்கு புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அமர சேர்கள் இல்லை. ஆங்காங்கே தரையில் அமர்ந்தும், நின்று கொண்டும் இருந்தனர். கவர்னர், முதல்வர் ஆகியோர் உரையாற்றிவிட்டு, மேடையில் இருந்து இறங்கி, வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வந்தனர். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பழங்குடியின விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம், பழங்குடியினரை கவரவிக்கும் விழா என்று அழைத்துவிட்டு அவர்களை நடைபாதையில் அமர வைத்துள்ளீர்கள்.

இதற்கு ஒருவிழாவா? ஒரு பழங்குடியின பெண்ணையாவது மேடை ஏற்றி கவுரவித்தீர்களா? மேடையில் இத்தனை அதிகாரிகளுக்கு வரிசையாக இடம் போட தெரிந்த உங்களுக்கு பழங்குடியின மக்களுக்கு, இருக்கை உள்ளிட்ட வசதிகளை ஏன் ஏற்படுத்தி தரவில்லை என கவர்னர், முதல்வரிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கவர்னர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து, பழங்குடியினருக்கு இருக்கை மற்றும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.

தொடர்ந்து அரங்கத்தினுள் பிளாஸ்டிக் சேர் கொண்டு வரப்பட்டு அனைவருக்கும் இருக்கையும், மதிய உணவும் தரப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால் பழங்குடியின நிர்வாகி அரங்கநாதன் கவர்னரிடம் சென்று, பழங்குடியினருக்கான நலத்திட்ட உதவிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. கடந்த ஆண்டு குறைந்தளவே பட்டாக்கள் வழங்கியுள்ளனர் என புகார் தெரிவித்தார். அதிகாரிகளை அழைத்த தமிழிசை, பழங்குடியின மக்களுக்கு என்னென்ன திட்டம் செயல்படுத்த வேண்டும், கிடப்பில் கிடக்கும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

The post புதுச்சேரி அரசு விழாவில் பரபரப்பு தரையில் அமர்த்தப்பட்ட பழங்குடி மக்கள் கவர்னர், முதல்வரிடம் வாக்குவாதம்: பழங்குடியினர் பெருமை தினத்தில் அவமதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Puducherry ,Tribal Pride Day ,Dinakaran ,
× RELATED சொத்தை காக்கவே நமச்சிவாயம்...