×

ஒன்றிய அரசின் பெயரை சொல்லி பணமோசடி விவகாரம்; போலீசுக்கு நடிகை நமீதா கணவர், பாஜ நிர்வாகி கடிதம்: கைதானவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

சேலம்: ஒன்றிய அரசின் பெயரை சொல்லி பண மோசடியில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், நடிகை நமீதாவின் கணவர், பாஜ நிர்வாகி ஆகியோர் உடல்நலம் சரியில்லை என போலீசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் முத்துராமன் (60). 3ம்வகுப்பு வரை படித்துள்ள இவர், எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பை தொடங்கி அதன் தேசிய தலைவராக தன்னையே நியமித்து கொண்டார். இது ஒன்றிய அரசின் பதவி என கூறி, அதன் செயலாளராக பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவை நியமனம் செய்தார். இவர்கள் இப்பிரிவின் தமிழ்நாடு தலைவராக நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரியை நியமித்தனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு சேலத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது தேசிய கொடி கட்டிய காரில், அரசு முத்திரையுடன் வந்து இறங்கினர். உண்மையாகவே இது ஒன்றிய அரசு பதவி தானா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், சூரமங்கலம் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் விசாரணை நடத்தினர். இதில், ஒன்றிய அரசின் பெயரை சொல்லி ஏமாற்றியது தெரியவந்தது. இதற்கிடையில் சேலத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவருக்கு, தமிழ்நாடு தலைவர் பதவி கொடுப்பதாக கூறி ரூ.50 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக கொடுத்த புகாரின்பேரில், முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் முத்துராமனின் மகள் திருமணம் நடக்க இருப்பதாக கூறி, நீதிமன்ற உத்தரவின்பேரில் 6 நாட்கள் இடைக்கால ஜாமீனில் ஒரு எஸ்.ஐ., 4 போலீஸ் பாதுகாப்புடன் முத்துராமன் உசிலம்பட்டி சென்றுள்ளார். அவர் நாளை மறுதினம் சேலம் சிறைக்கு திரும்புவார். இதற்கிடையில் முத்துராமன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில், பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயணம் சிவகங்கை வந்தபோது, ரூ.1 கோடி கொடுத்ததாக முத்துராமன் கூறினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகை நமீதா கணவர் சவுத்ரியையும், பாஜ ஊடகப்பிரிவு மாநில செயலாளராக இருந்த மஞ்சுநாத்தையும் விசாரிக்க சூரமங்கலம் போலீசார் சம்மன் அனுப்பினர். நேற்று இருவரும் போலீசில் ஆஜராகியிருக்க வேண்டும். அவர்கள் ஆஜராகாமல் வக்கீல் மூலமாக பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். நேற்று இரவு அந்த கடிதம் வந்தது. அதில், உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் விசாரணைக்கு வரமுடியவில்லை. சரியானதும் விசாரணைக்கு வருகிறேன். எனது வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள்’ என கூறியுள்ளனர்.

இதற்கிடையில் பாஜ ஊடக பிரிவு தலைவரான மஞ்சுநாத் பாஜவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர்தான் முத்துராமனுக்கும், பாஜ தலைவர்களுக்கும் இடையே மிகுந்த பாலமாக இருந்து செயல்பட்டுள்ளார். இவர் மூலமாகத்தான் பணம் பட்டுவாடா நடந்ததாக கூறப்படுகிறது. இதனை போலீஸ் காவலில் முத்துராமன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாகத்தான் அவரை விசாரணைக்கு போலீசார் அழைத்துள்ளனர்.
முதலில் காவலில் எடுத்து விசாரித்தபோது, போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முத்துராமன் சரியான பதிலை கூறவில்லை. 3ம் வகுப்பு படித்துள்ள இவர், ஒன்றிய அரசின் சின்னத்தை பயன்படுத்தும் வகையில் கொண்டு சென்றது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே முத்துராமனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு கடந்த 8ம் தேதியே சூரமங்கலத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டது. இதையடுத்து இப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். இவர்கள் ஒன்றிய அரசின் பெயரை பயன்படுத்தி யாரிடமெல்லாம் பண மோசடி செய்தனர்? இவ்வாறு ஏமாற்றி வாங்கிய பணம் யாரிடம் கொடுக்கப்பட்டது? என்பது போன்ற கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கும் என தெரிகிறது. இதில் பாஜவின் முக்கிய புள்ளிகளும் சிக்குவார்கள் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசின் பெயரை சொல்லி பணமோசடி விவகாரம்; போலீசுக்கு நடிகை நமீதா கணவர், பாஜ நிர்வாகி கடிதம்: கைதானவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : EU ,Namita ,Salem ,EU Government ,
× RELATED முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட...