×

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பயிற்சி பெற்ற 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு தயார்: தமிழ்நாடு காவல்துறை சார்பில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி பெற்ற 540 காவலர்கள் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆறுகள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு காவல்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவுப்படி காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சிறப்பு அவசர கட்டுப்பாட்டு அறை எஸ்பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதோடு இல்லாமல் மழை வெள்ளத்தால் பாதிப்பு, கட்டிடங்கள் இடிந்து பாதிக்கப்படும் பொதுமக்கள், கால்நடைகளை மீட்கும் வகையில் பயிற்சி பெற்ற காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் என 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 30 பேர் இருப்பார்கள். குறிப்பாக, அதிகளவில் மழை பொழியும் பகுதிகளான திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு பேரிடம் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மணிமுத்தாறு பகுதிகளில் 3 பேரிடர் மீட்பு குழுவினர். மலைகள் சார்ந்த பகுதிகளான கோவை புதூர் பகுதிகளிலும் பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவசர சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகளின் படி விரைந்து செல்லும் வகையில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் இயந்திரங்கள், தண்ணீரை வெளியேற்றும் மின் மோட்டார் உள்ளிட்ட உபகரணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

The post வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பயிற்சி பெற்ற 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு தயார்: தமிழ்நாடு காவல்துறை சார்பில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : 18 Disaster Rescue Team ,Northeast Monsoon ,Tamil Nadu Police ,Chennai ,Dinakaran ,
× RELATED சேமநல நிதியில் இருந்து 16 காவலர்...