×

சின்னசேலம் ஏரிக்கு கோமுகி அணை நீர் வர பொதுப்பணித்துறை நடவடிக்கை தேவை

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சின்னசேலம் : சின்னசேலம் ஏரிக்கு கோமுகி அணை நீர் வருவதற்கு பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சின்னசேலம் நகரின் மையப்பகுதியில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் உள் வளாகத்தில் கிணறு தோண்டி சின்னசேலம் நகர பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர். அதனால் இந்த ஏரியை சின்னசேலம் பகுதி மக்களின் தாகம் தீர்க்கும் ஏரி என்று கூட சொல்லலாம். மேலும் இந்த ஏரியில் நீர் தேங்கி நிற்பதால் சுற்றுப்புறங்களில் உள்ள பாசன, குடிநீர் கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் உள்ளது.

இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் மட்டும் கோமுகி அணையில் இருந்தும், மலைப்பகுதியில் உள்ள காட்டாறுகளின் மூலமும் நீர்வரத்து உள்ளது. இந்த ஏரி நிரம்பி வழிந்து, ஏரிக்கு கிழக்கு பகுதியில் உள்ள பெத்தாசமுத்திரம், சின்னசேலம் உள்ளிட்ட 10 கிராம விவசாயிகளும் கால்வாய் பாசனம் மூலம் பயன்பெறுகின்றனர். கடந்த காலங்களில் இந்த ஏரி, போதிய மழை இருந்த போதிலும் கடத்தூர் வனப்பகுதி கால்வாயில் பாறை உள்ளிட்ட தடை இருந்ததால் வறண்டு காணப்பட்டது.

இதனால் சின்னசேலம் பகுதியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. இதையடுத்து உதயசூரியன் எம்எல்ஏ மற்றும் சின்னசேலம் பகுதி சமூக ஆர்வலர்களின் முயற்சியால் பாறைகளை உடைத்ததுடன், ஏரிக்கு வரும் கால்வாயும் தூர்வாரப்பட்டது. இதையடுத்து சென்ற ஆண்டு ஏரிக்கு கோமுகி அணை நீர் கால்வாய் மூலம் தென்செட்டியந்தல், பைத்தந்துறை, புதூர், நமசிவாயபுரம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி கோடி வந்து இடையில் உள்ள ஏரிகளுடன், சின்னசேலம் ஏரியும் நிரம்பி கோடி ஓடியது. மக்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். இதனால் குடிநீர் பிரச்னையும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்யவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கோமுகி அணை நிரம்பியுள்ளது.

அணை நிரம்பிய நிலையில் கோமுகி ஆற்றில் சுமார் 10,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. ஆற்றில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டது. அப்போது பொதுப்பணித்துறை நிர்வாகமும், விவசாயிகளும் தனிக்கவனம் செலுத்தியிருந்தால், ஆற்றில் சென்ற நீரை கடத்தூர் பாசன கால்வாய் பக்கம் திருப்பி விட்டிருந்தால் கடத்தூர், நல்லாத்தூர், குதிரைசந்தல், காரனூர், தெங்கியாநத்தம் ஏரிகள் கோடி ஓடியிருக்கும்.

அப்போது பொதுப்பணித்துறை நிர்வாகம் கோமுகி ஆற்று வெள்ளநீரை சரியாக பயன்படுத்தாததால் தற்போது கடத்தூர், நல்லாத்தூர் உள்ளிட்ட ஒரு சில ஏரிகள் நிரம்பி உள்ளது. இன்னும் நமசிவாயபுரம், தென்செட்டியந்தல், பைத்தந்துறை உள்ளிட்ட ஏரிகள் நிரம்பவில்லை. இந்த ஏரிகள் நிரம்பினால்தான் சின்னசேலம் ஏரிக்கு நீர் செல்லும். தற்போது போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் மீதம் உள்ள ஏரிகள் நிரம்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த காலங்களில் சின்னசேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களின் முயற்சியால் கடத்தூர் முதல் சின்னசேலம் வரையிலான பாசன கால்வாய் சரிசெய்யப்பட்டதால் இடையில் உள்ள ஏரிகள் விரைவில் நிரம்பியது. இதனால் சின்னசேலம் ஏரிக்கும் கோமுகி அணை நீர் சென்றதால் நிரம்பி இருந்தது. தற்போது சின்னசேலம் ஏரியில் உள்ள நீர் வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சின்னசேலம் ஏரி நிரம்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது.

ஆகையால் கோமுகி அணை பொதுப்பணித்துறையினரும், சின்னசேலம் ஏரி பொதுப்பணித்துறையினரும் இணைந்து இந்த மழை காலத்திலேயே இடையில் உள்ள ஏரிகள் நிரம்பி, சின்னசேலம் ஏரிக்கு நீர் சென்று நிரம்பும் வகையில் பாசன கால்வாயை சுத்தம் செய்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்
எதிர்பார்க்கின்றனர்.

The post சின்னசேலம் ஏரிக்கு கோமுகி அணை நீர் வர பொதுப்பணித்துறை நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Tags : Komuki dam ,Chinnasalem lake ,Chinnasalem ,Public Works Department ,Dinakaran ,
× RELATED சின்னசேலம் அருகே பரபரப்பு கடன் தொல்லையால் வாலிபர் தீக்குளிப்பு