×

ஒரு நூற்றாண்டுக்கு மேல் நெஞ்சுரத்தோடு வாழ்ந்த செஞ்சிறுத்தை போராடுவதை நிறுத்தி கொண்டது :கவிஞர் வைரமுத்து இரங்கல்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவிற்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். அவருக்கு சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று (நவ.15) பிரிந்தது.பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த சங்கரய்யா,வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, 95 வயதிலும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராடியவர் ஆவார். அன்னாரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து கவிதை பாணியில் சங்கரய்யா இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,

“ஒரு நூற்றாண்டுக்கு மேல்
நெஞ்சுரத்தோடு வாழ்ந்த
செஞ்சிறுத்தை
இன்றுமுதல் போராடுவதை
நிறுத்திக்கொண்டது

தடம் மாறாத கொள்கை
தடு மாறாத அரசியல்

பொது வாழ்வுக்கும்
தனி வாழ்வுக்கும்
இடைவெளி இல்லாத எளிமை

சிறைக்கம்பிபோல்
வளையாத முதுகெலும்பு

சிறைக்கோட்டத்திலும்
காங்கிரஸ்காரர்களைக்
கம்யூனிஸ்ட்களாய் மாற்றிய
குன்றாத கொள்கை

இவற்றின் மொத்த உருவம்
சங்கரய்யா

தங்கள் கடைசித் தலைமுறை
போய்விட்டதோ என்று
நேர்மையும் தியாகமும்
வரிசையில் நின்று
வணக்கம் செலுத்துகின்றன

செவ்வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

The post ஒரு நூற்றாண்டுக்கு மேல் நெஞ்சுரத்தோடு வாழ்ந்த செஞ்சிறுத்தை போராடுவதை நிறுத்தி கொண்டது :கவிஞர் வைரமுத்து இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Poet Vairamuthu ,Marxist Communist Party ,Sankaraya ,Marxist Communist ,Poet Vairamuthu Mourangal ,
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...