×

வேலம்பட்டியில் ₹2.21 கோடியில் நடைபெறும் தொட்டி பாலம் நீட்டிப்பு பணி 80 சதவீதம் நிறைவு

*விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் ₹2.21 கோடி மதிப்பில் 400 மீ., நீளம் தொட்டி பாலம் நீட்டிப்பு பணி, 80 சதவீதம் நிறைவு அடைந்துள்ளதால் விவசாயிகள் மிகழ்ச்சி அடைந்துள்ளது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து கால்வாய் மூலம் போச்சம்பள்ளி அடுத்த பாலேகுளி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏரியில் இருந்து சந்தூர் ஏரி வரை உள்ள 28 ஏரிகளுக்கு, தண்ணீர் செல்லும் வகையில் கடந்த 2012ம் ஆண்டு புதியதாக கால்வாய் அமைக்கப்பட்டது.

அதன்படி, பாலேகுளி ஏரியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் சென்றாயம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி வரை தண்ணீர் செல்லும் வகையில், இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த தூரம் 13.8 கி.மீ ஆகும். இந்த கால்வாய் திட்டம் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகிறது. அத்துடன் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில் இக்கால்வாய் தண்ணீர் கடக்கும் பகுதியான வேலம்பட்டி கிராமத்தில், 300 மீட்டர் நீளத்திற்கு தொட்டி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி பாலமானது 12 அடி உயரம், 4 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி பாலத்தின் இருபுறமும் 200 மீட்டர் நீளத்திற்கு மண் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் தண்ணீர் செல்லும் போது, அதிக அளவில் நீர் கசிவு ஏற்படுகிறது. அத்துடன் கால்வாய் கரையினை எலி, பெருச்சாளி துழையிடுவதாலும் அதிக அளவில் அரிப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்வது தடைபடுகிறது. எனவே, தொட்டிப்பாலத்தை இருபுறமும் நீட்டிப்பு செய்ய வேண்டும் என, கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதையடுத்து தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தொட்டி பாலம் நீட்டிப்பு பணிக்காக ₹2கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தம் விடப்பட்டு, அதற்கான பணியும் துவங்கி நடந்து வருகிறது. இந்த பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் பணி முற்றிலும் நிறைவடைந்து, நீர்கசிவு இல்லாமல் கடைமடை வரை சீராக தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை விவசாயிகள் கூறியதாவது: போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள பகுதியாகும். நெல், தென்னை, பூக்கள் மற்றும் மானாவாரி பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். பாசனத்திற்கு நீர் திறப்பின் போது, தண்ணீர் வீணாவதை தடுக்க, தொட்டி பாலத்தை நீட்டிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தோம்.

தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நடந்து வருகிறது. தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டது. இதனால் கடைமடை விவசாயிகளும் பயனடைவார்கள். எனவே, இந்த பணி விரைவில் முடிந்ததும், இந்த பாலத்தின் வழியாக தண்ணீர் திறந்து விட்டால் அனைத்து ஏரிகளும் நிறைவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இந்த நல்ல திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, பணியை விரைந்து தொடங்கி செயல்படுத்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பர்கூர் எம்எல்ஏ மதியழகன், பாரூர் பொதுப்பணித்துறை (நீர்வளம்) அலுவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறினர்.

The post வேலம்பட்டியில் ₹2.21 கோடியில் நடைபெறும் தொட்டி பாலம் நீட்டிப்பு பணி 80 சதவீதம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Velampatti ,Krishnagiri ,Velampatti, Krishnagiri district ,
× RELATED வெளி மாநில மது விற்ற 42 பேர் மீது வழக்குபதிவு