×

அதிமுக கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை!!

சென்னை: அதிமுக கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்துக்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருகிறார்.

இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவித்து வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கட்சியிலிருந்து தன்னை நீக்கியதற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்க முடியாது எனக் கூறியுள்ளார். அந்த உத்தரவு அவருக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் எண்ணிட பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர். இதையடுத்து இடைக்கால தடை காரணமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இன்றே வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இருந்தபோதிலும் இவ்வழக்கு நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post அதிமுக கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : O Paneer Wealth ,Chennai ,O ,Paneer ,Richam ,O'Paneer Wealth ,Dinakaran ,
× RELATED வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம்...