×

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை பலி இரு மாநில வனத்துறையினர் விசாரணை பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில்

பேரணாம்பட்டு, நவ.15: பேரணாம்பட்டு அருகே வேப்பமரநெட்டு பகுதியில் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை பலியானது. பேரணாம்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம் செல்லும் சாலையில் உள்ள பத்தலப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் வனத்துறையினரும், காவல்துறையினரும் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு தமிழக எல்லை அருகே உள்ள ஆந்திர வனப்பகுதியான வேப்பமரநெட்டு என்ற இடத்தில் சாலையோரம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலையில் பலத்த காயத்துடன் பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது.

இது குறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு விரைந்த வனத்துறையினர், சிறுத்தை உயிரிழந்த பகுதி ஆந்திரா எல்லை என்பதால்
ஆந்திர மாநில வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கு வந்த ஆந்திர வனத்துறையினர் உயிரிழந்த சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், சிறுத்தையை யாரேனும் அடித்து கொன்று சாலையில் வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் இருமாநில வனத்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை பலி இரு மாநில வனத்துறையினர் விசாரணை பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில் appeared first on Dinakaran.

Tags : Peranampattu ,Peranampatu ,Veppamaranetdu ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...