×

காதல் தகராறில் தாய் மாமன் கழுத்தறுத்து கொலை அக்கா மகன், 2 சிறுவர்கள் கைது குடியாத்தத்தில் மது குடிக்க வைத்து கொடூரம்

குடியாத்தம், நவ.15: காதல் தகராறில் மது குடிக்க வைத்து தாய் மாமனை கழுத்தறுத்து கொலை செய்த அக்கா மகன், 2 சிறுவர்களை போலீசார் கைது செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வாலிபர் ஒருவர் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலையான வாலிபர், ஆலப்பட்டறை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்(30) என்பது தெரியவந்தது. கூலித்தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பின்னர் போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த செல்வராஜ் உடன் பிறந்த அக்கா மகன் ஜோதிபாஸ்(25) செல்வராஜை கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஜோதிபாஸ் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இவர்களது உறவினர் பெண்ணை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக பேசி பழகி வந்ததால் இதனை ஜோதிபாஸ் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வராஜை கொலை செய்ய திட்டமிட்ட ஜோதிபாஸ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான 2 சிறுவர்கள் விவசாய நிலத்திற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஜோதிபாஸ், செல்வராஜ் மற்றும் 2 சிறுவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, செல்வராஜிக்கு போதை தலைக்கேறியது. இதனை பயன்படுத்தி திட்டமிட்டது போல் ஜோதிபாஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வராஜுன் கழுத்தை அறுத்துள்ளார். இதற்கு 2 சிறுவர்களும் உதவியாக இருந்துள்ளனர். வலி தாங்க முடியாமல் கதறிய செல்வராஜ் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து ஜோதிபாஸ் மற்றும் கொலைக்கு உதவியாக இருந்த 14, 16 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ரயில்வே தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ஜோதி பாஸ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காதல் தகராறில் தாய் மாமன் கழுத்தறுத்து கொலை அக்கா மகன், 2 சிறுவர்கள் கைது குடியாத்தத்தில் மது குடிக்க வைத்து கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Gudiyattam ,
× RELATED குடியாத்தத்தில் அரிய தாவரவியல்...