×

வழக்கறிஞர்கள் சமூகத்தில் சாதிய பாகுபாடு கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: வழக்கறிஞர்கள் சமூகத்தில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள பாரம்பரியமிக்க மெட்ராஸ் பார் அசோசியேஷன் அலுவலகத்திற்குள் கடந்த 2012ம் ஆண்டு தண்ணீர் குடிக்க சென்ற இளம் வழக்கறிஞர் ஒருவரை அங்கிருந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர் தடுத்ததாக அந்த இளம் வழக்கறிஞரின் தந்தையான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதேபோல இந்த சங்கத்தில் பழங்குடியின மற்றும் பட்டியலினத்தவர்களை சேர்க்க மறுப்பதாகக்கூறி வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸூம், தன்னை இந்த சங்கத்தில் சேர்க்கவில்லை எனக்கூறி வழக்கறிஞர் எஸ்.மகாவீர் சிவாஜியும் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, வழக்கறிஞர்கள் மத்தியில் சாதி, மத, இன, பொருளாதார ரீதியிலான பாகுபாட்டை ஏற்படுத்தக்கூடாது. அனைவரும் சமம் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. எனவே பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சத்தை மெட்ராஸ் பார் அசோசியேசன் வழங்க வேண்டும். அதேபோல இடையீட்டு மனுதாரர்களான வழக்கறிஞர்கள் ஏ.மோகன்தாஸ், எஸ்.மகாவீர் சிவாஜி ஆகியோரை ஒரு வாரத்தில் சங்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மெட்ராஸ் பார் அசோசியேசன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மெட்ராஸ் பார் அசோசியேசன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.மாசிலாமணி, விஜய் நாராயண், உயர் நீதிமன்ற பதிவாளர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திக் ரங்கநாதன் மற்றும் மனுதாரர்களான வழக்கறிஞர்கள் யானை ராஜேந்திரன், மகாவீர் சிவாஜி ஆகியோரில் நேரடியாகவும், மோகன்தாஸ் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்புவும் ஆஜராகி வாதிட்டனர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்குள் முற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியினத்தவர் என பிரிக்கப்படுமானால் வழக்கறிஞர் சமுதாயத்தின் மரியாதை குறைந்து விடும். மெட்ராஸ் பார் அசோசியேசனில் உறுப்பினராக சேர்வதற்கு சம்பந்தப்பட்டவர்களை அணுக வேண்டுமேயன்றி தேசிய பழங்குடியினர் ஆணையத்தில் புகார் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

மனுதாரர்கள் தங்களுக்கான குறைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிடலாம். தேவைப்பட்டால் அதற்காக தனியாக ரிட் வழக்குகளைத் தொடரலாம். இழப்பீட்டை பொருத்தமட்டில் தனி நீதிபதி வரம்பைத்தாண்டி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மனுதாரர் யானை ராஜேந்திரன் இறந்துபோன மூத்த வழக்கறிஞர் மீது குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே அவரது கோரிக்கையை ஏற்க இயலாது. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post வழக்கறிஞர்கள் சமூகத்தில் சாதிய பாகுபாடு கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chennai ,Madras High Court ,Chennai High ,Court ,High Court ,Dinakaran ,
× RELATED சவுக்கு சங்கருக்கு ஒரு வழக்கில் இடைக்கால ஜாமீன்..!!