×

ஒன்றிய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக பண மோசடி நமீதா கணவர், பாஜ நிர்வாகியை கைது செய்ய போலீஸ் தீவிரம்: சம்மனுக்கு ஆஜராகாததால் நடவடிக்கை

சேலம்: ஒன்றிய அரசிடம் கடன் பெற்று தருவதாக பணமோசடி நடந்த விவகாரத்தில் நடிகை நமீதா கணவர், பாஜ மாநில நிர்வாகி ஆகியோர் சம்மனுக்கு ஆஜராகாததால் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.சேலத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் சிறு தொழில் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து கடன் பெற்றுத் தருவதாக கூறி அமைப்பின் தேசிய தலைவரான மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன், செயலாளரான பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ், தமிழ்நாடு தலைவரான நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி ஆகியோர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில், அரசின் முத்திரை, தேசிய கொடி ஆகியவற்றை பயன்படுத்தி ஏமாற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் சூரமங்கலம் போலீசார் முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இந்நிலையில், கோபால்சாமி என்பவர், தன்னிடம் ரூ.50 லட்சம் வாங்கிக்கொண்டு அந்த அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பதவி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டு, ரூ.4 கோடி வாங்கி நமீதா கணவருக்கு அந்த பதவியை தந்துவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை இரண்டு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.இதற்கிடையே கோபால்சாமியும் முத்துராமனும் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயணம் சிவகங்கை வந்தபோது ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் மதுரைக்கு வந்தபோது ரூ.75 லட்சம் கேட்டதாகவும் முத்துராமன் அந்த ஆடியோவில் பேசியிருந்தார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில், இந்த அமைப்பின் தமிழ்நாடு தலைவரான நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி, பாஜ முக்கிய நிர்வாகியான மஞ்சுநாத் ஆகியோரிடம் விசாரிக்க சூரமங்கலம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.முத்துராமனை காவலில் எடுத்து விசாரித்தபோது, பணத்தை யார் மூலம் பாஜவுக்கு கொடுத்தோம் என்ற தகவலை தெரிவித்துள்ளார். இதனால்தான் மஞ்சுநாத்தை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பாஜ ஊடகப்பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் உள்ளார். நமீதாவின் கணவர் சவுத்ரி, மஞ்சுநாத் ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சேலம் சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்மன் அனுப்பியுள்ளார். அதில், 14ம் தேதி (நேற்று) ஆஜராகுமாறு தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் இருவரும் நேற்று வரவில்லை. இதையடுத்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த மோசடியில் பாஜவின் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* பாஜ நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

பாஜ நட்சத்திர பேச்சாளர் நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி, அக்கட்சியின் தமிழக ஊடகபிரிவு மாநில செயலாளர் மஞ்சுநாத் ஆகியோருக்கு சேலம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மஞ்சுநாத்தை அவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜ ஊடகப்பிரிவு மாநிலத்தலைவர் ரங்கநாயகுலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக பாஜ ஊடக பிரிவு மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வரும் எஸ்.மஞ்சுநாத் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஒன்றிய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக பண மோசடி நமீதா கணவர், பாஜ நிர்வாகியை கைது செய்ய போலீஸ் தீவிரம்: சம்மனுக்கு ஆஜராகாததால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Namitha ,Union government ,Salem ,Nameeta ,
× RELATED கரும்பு கொள்முதல் விலையை ரூ.340ஆக உயர்த்திய ஒன்றிய அரசுக்கு அண்ணாமலை நன்றி