×

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற நிதி விவரத்தை இன்றைக்குள் தர கெடு: அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலம் இதுவரை பெற்ற நன்கொடை விவரங்களை இன்றைக்குள் சமர்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.அரசியல் கட்சிகளுக்கு பணமாக நன்கொடை தருவதற்கு பதிலாக, தேர்தல் பத்திரத்தை ஒன்றிய பாஜ அரசு கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன் அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் வாங்கும் அனைத்து நன்கொடைகள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் மொத்த லாபத்தில் 7.5 சதவீதத்திற்கு மேல் அல்லது வருவாயில் 10 சதவீதத்திற்கு அதிகமாக தேர்தல் நிதி தரக்கூடாது என்ற நிபந்தனை இருந்தது.

தேர்தல் பத்திரம் வந்த பிறகு, ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை தேர்தல் பத்திரத்தை தனிநபரோ, நிறுவனமோ பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கிக் கொள்ளலாம். அதை அவர் விரும்பும் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்த பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை யாரிடமும் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.இத்தகைய ரகசியத்தால் தேர்தல் பத்திரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2019 ஏப்ரல் 12ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்களை சீலிட்ட கவரில் வைத்து தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும்’ என கூறியது.

மேலும், வழக்கின் தீவிரத்தன்மை கருதி இவ்வழக்கை விரிவாக விசாரிப்பதாக கூறியது.இதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் கடந்த மாதம் 31ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நிதி வழங்குவோரின் விவரங்களை அறிய பொதுமக்களுக்கு உரிமையில்லை என ஒன்றிய அரசு தரப்பிலும், உரிமை உண்டு என மனுதாரர் தரப்பிலும் காரசார வாதம் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 2019ல் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை குறிப்பிட்ட நீதிபதிகள், கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் தேர்தல் பத்திரம் மூலம் இதுவரை அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை, வழங்கியவர்கள் உள்ளிட்ட விவரங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 2ம் தேதி உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 3ம் தேதி தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் எழுதியது. அதில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை, அந்த பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை, யாரிடம், எவ்வளவு நன்கொடை பெறப்பட்டது என்கிற முழு விவரங்களை சீலிப்பட்ட கவரில் வைத்து வரும் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்’ என கூறப்பட்டது. இதன்படி, தேர்தல் ஆணையத்தின் கெடு இன்று மாலை 5 மணிக்குள் நிறைவடைகிறது. இதுவரை தேர்தல் பத்திரம் மூலம் மிக அதிக நன்கொடை பெற்றிருப்பது ஆளும் பாஜ கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற நிதி விவரத்தை இன்றைக்குள் தர கெடு: அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Election Commission ,New Delhi ,
× RELATED உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம்,...