×

உத்தரகாண்ட் சுரங்க விபத்து 40 தொழிலாளர்களை மீட்க குழாய் பதிக்கும் பணி தீவிரம்: இன்று மீட்கப்படுவார்களா?

உத்தரகாசி: உத்தரகாண்டில் உத்தரகாசி மாவட்டத்தில் சில்கியாரா- தண்டல்கான் இடையே மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுரங்கப் பாதையின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக திடீரென சரிந்தது. இதில், வேலை செய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சிக்கினர். 160க்கும் மேற்பட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மேலும், அவர்களுக்கு குடிநீர், உணவு, மருந்துகள் ஆகியவையும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. சுரங்கத்தினுள் இருந்து மண் மற்றும் சகதி சரிவதால், அவர்களை மீட்கும் பணியில் சற்று தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நேற்று 3-வது நாளாக நடந்தது. அதிநவீன துளையிடும் இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகள் இடையே துளையிட்டு, 900 மிமீ சுற்றளவு கொண்ட இரும்பு குழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக பதிக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இந்த குழாய்கள் பதிக்கும் பணி நீர்ப்பாசன துறையை சேர்ந்த 5 பொறியாளர்கள் கொண்ட நிபுணர் குழுவின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், “அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். 21 மீட்டர் அளவிலான இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்கியிருப்பவர்களை தொடர்ந்து தொடர்பு கொள்ள முடிகிறது. அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்,” என்று தெரிவித்தனர்.

* தப்பிக்கும் சுரங்கம்
குழாய் மூலம் பாதுகாப்பு பாதை அல்லது சிறிய சுரங்கப்பாதை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு தேவையான பொருட்கள் வந்து சேர்ந்துள்ளன. தொழிலாளர்கள் வெளியேறுவதற்கான நடைபாதை தயாரிக்கப்படுகிறது. தொடர்ந்து, அவர்கள் தப்பிக்கும் சுரங்கம் (எஸ்கேப் டன்னல்) அமைக்கும் பணியும் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post உத்தரகாண்ட் சுரங்க விபத்து 40 தொழிலாளர்களை மீட்க குழாய் பதிக்கும் பணி தீவிரம்: இன்று மீட்கப்படுவார்களா? appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,mine accident ,Silkiara ,Thandalgaon ,mining accident ,Dinakaran ,
× RELATED இதுதான் அவங்களோட உண்மை முகம் ஏழைகளின்...