×

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா ஆலோசனை

சென்னை: வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அலுவலர்களால் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அலுவலர்களால் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் இன்று (14.11.2023) காணொலி காட்சி வாயிலாக ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை உள்ளிட்ட களப்பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரினை அகற்றுவதற்கான மோட்டார் பம்புகள் மற்றும் பேரிடர் மீட்பு வாகனங்கள் இயங்கும் வகையில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை தற்பொழுது பெய்து வரும் நிலையில் அனைத்து அலுவலர்களாலும் களத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு மேயர் அவர்கள் காணொலி காட்சியின் வாயிலாக கேட்டறிந்து, மேலும் களத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஒவ்வொரு மண்டலங்கள் வாரியாக வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், தீவிரமாக மழை பெய்யும் பொழுது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், தயார்நிலையில் உள்ள மோட்டார் பம்புகள் மற்றும் இயந்திரங்கள் குறித்தும் மாண்புமிகு மேயர் அவர்கள் கேட்டறிந்து விரிவாக ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு மேயர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது : மழைக்காலங்களில் பொதுமக்களை பாதிக்காதவாறு தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் அனைத்து அலுவலர்களும். பணியாளர்களும் விழிப்புணர்வுடன் பணியாற்றிட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியின் 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் 6 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர்த்தேக்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்பொழுது பெய்யும் மழையின் காரணமாக பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட வேண்டும். மழையின் காரணமாக விழும் மரங்களையும், விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளையும் உடனடியாக அகற்றிட வேண்டும். மழையின் காரணமாக சேதமடையும் சாலைகளை சீரமைத்திடவும், வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் ஏற்பட்டுள்ள குப்பைக் கழிவுகள் மற்றும் வண்டல்களை தொடர்ந்து அகற்றிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு மேயர் அவர்கள் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு மேயர் அவர்கள் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திருமதி ஆர்.லலிதா, இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள், வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு) அவர்கள், திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., (மத்தியம்) அவர்கள், திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு) அவர்கள், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Mayor Priya ,Chennai Corporation ,Chennai ,Metropolitan Chennai Corporation ,Northeast Monsoon ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேயர் பிரியா கண்டனம்