×

புதுச்சேரி வனத்துறை சார்பில் ஊசுட்டேரியில் பறவைகள் தங்க குன்றுகள் அமைக்கும் பணி தீவிரம்

வில்லியனூர் :வில்லியனூர் அருகே உள்ள ஊசுட்டேரி புதுச்சேரியின் மிகபெரிய ஏரிகளில் முதன்மையானதாக விளங்குகிறது. இவை புதுச்சேரி-தமிழக பகுதிகளை சேர்ந்த 800 ஹெட்டர் பரப்பளவை கொண்டது. புதுச்சேரி 390 ஹெக்டர் பரப்பளவும், தமிழகம் 410 ஹெக்டர் பரப்பளவும் கொண்டுள்ளது. 15.54 சதுர கி.மீ நீர்பிடிப்பு பகுதியை கொண்ட ஊசுட்டேரி 4 கனஅடி நீர் கொள்ளளவை கொண்டது. இந்த ஊசுட்டேரிக்கு சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் இருந்தும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் இருந்தும் பருவமழையின் போது தண்ணீர் வருவது வழக்கம். இதனால் ஊசுட்டேரி சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து பலவகையான பறவைகள் ஏராளமாக வந்து ஏரியை அலங்கரித்து வருகிறது. ஊசுட்டேரிக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து செல்வதால் கடந்த 2008ம் ஆண்டு புதுச்சேரி அரசு ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. பிறகு தமிழக அரசும் பறவைகள் சரணாலயமாக அறிவித்தது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி விடப்பட்டது. இதன் மூலம் ஏரியில் உள்ள பறவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வந்தனர். இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் வெளிநாடுகளில் இருந்து இரைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் பலவிதமான பறவைகள் ஊசுட்டேரிக்கு வருவது வழக்கம். ஏரியில் பறவைகள் தங்குவதற்கும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்கும் போதிய இடம் இல்லாததால் கரையோரம் உள்ள சில புதர்களில் தஞ்சம் அடைந்து வந்தன.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஊசுட்டேரி படகு குழாம் அருகே 5 குன்றுகள் அமைக்கப்பட்டது. பிறகு அடுத்தடுத்து பெய்த மழையால் குன்றுகள் தண்ணீரில் கரைந்து சிறிய குன்றாக மாறியுள்ளது. தற்போது பறவைகள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளன. இருப்பினும் அதிகளவில் அரியவகை பறவைகள் வருவதால் அவைகள் தங்குவதற்காக வனத்துறை சார்பில் ஏரியில் குன்றுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி பொதுப்பணித்துறையின் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியில் பெரிய அளவில் குன்றுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த மழைக்காலத்திற்குள் மரக்கன்றுகள் நட்டு பறவைகள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கும் அரியவகை பறவைகளின் வருகையை கணக்கிடவும், அவைகளை கண்காணிக்கஉயர்கோபுரங்கள் அமைக்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக மண்பரிசோதனை செய்யும் பணியும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post புதுச்சேரி வனத்துறை சார்பில் ஊசுட்டேரியில் பறவைகள் தங்க குன்றுகள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Puducherry Forest Department ,Oosutteri ,Willianur ,Puducherry ,Puducherry-Tamil ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாக்க...