×

மாவட்ட நிர்வாகம், அனைத்து வங்கிகள் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம்

*ஊட்டி, கூடலூர், குன்னூரில் நடக்கிறது; கலெக்டர் அருணா தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளின் ஏற்பாட்டில் ஊட்டியில் 17ம் தேதி, கூடலூரில் 20ம் ேததி, குன்னூரில் 24ம் தேதி ஆகிய நாட்களில் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம் நடக்கிறது.இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின் படி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி கடன் கோரி விண்ணப்பிப்பதற்கான சிறப்பு கல்வி கடன் முகாம் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 வருவாய் கோட்டத்திலும் நடைபெற உள்ளது.

இதன்படி வரும் 17ம் தேதி ஊட்டி ஜேஎஸ்எஸ் பார்மஸி கல்லூரியிலும், 20ம் தேதி தாளூர் நீலகிரி கலை கல்லூரியிலும், 24ம் தேதி கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியிலும் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்ேனாடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in அல்லது www.jansamarth.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். முகாம் நடைபெறும் நாளான்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்ப நகல், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமான சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், ரேசன் அட்டை நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட கல்வி கட்டண விவரம், 10, 12ம் வகுப்பு கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை போன்ற ஆவணங்களுடன் கல்வி கடன் முகாமில் கலந்து கொள்ளலாம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ-சேவை மையம் முகாமில் இயங்கும். மாணவர்கள் ஆதார் அட்டை, பான்கார்டு, சாதி சான்று, வருமான சான்று இங்கு விண்ணப்பிக்கலாம்.

இம்முகாம்களில் அனைத்து வங்கிகளும் கலந்து கொண்டு மாணவர்கள் விண்ணப்பங்களை பெற மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உரிய சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு கல்வி கடன் பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்கள் அறிய மாவட்ட முன்னோடி வங்கி- 0423-2443633 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

கலெக்டர் அருணா தலைமையில் கூட்டம்: கோத்தகிரி வட்டத்தில் உள்ள பழங்குடியின குக்கிராமங்களில் பழங்குடியினருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை வகித்து பேசுகையில், ‘‘கோத்தகிரி வட்டத்திற்குட்பட்ட பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்களில் ஹமாரா சங்கல்ப் விக்சித் பாரத் என்ற மத்திய அரசு திட்டங்கள் குறித்த ஒளி விளக்கப்படம் தகவல் தொழில்நுட்ப வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

வரும் 15ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை குஞ்சப்பனை, கொணவக்கரை, ஜக்கனாரை, கோடநாடு, நெடுகுளா, கெங்கரை, தேனாடு, அரக்கோடு, கடினமாலா, நடுஹட்டி மற்றும் தெங்குமரஹாடா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடமாடும் தகவல் தொழில்நுட்ப வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஒளிபரப்பப்படும் ஒளி விளக்கப்படங்களை பழங்குடியின மக்கள் கண்டு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தேவையான நடவடிக்கைள் எடுக்க வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜோதி லட்சுமணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் கோமதி, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட நிர்வாகம், அனைத்து வங்கிகள் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம் appeared first on Dinakaran.

Tags : Ooty, ,Kudalur ,Coonoor ,Aruna ,Nilgiri ,Dinakaran ,
× RELATED ஊட்டி-கூடலூர் சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது; 5 பேர் உயிர் தப்பினர்