×

தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த 2 வாலிபர்கள் பலி

*வேலூரில் தீபாவளியன்று சோகம்

வேலூர் : வேலூரில் தடுப்புச்சுவரில் பைக் மோதிய விபத்தில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர்.வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்தவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ஆறுமுகத்தின் மகன் பாலமுருகன்(18). ராமு என்பவரின் மகன் முத்துவேல்(19). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளிகள். தீபாவளி பண்டிகை கொண்டாட நேற்று முன்தினம் இருவரும் பைக்கில் கஸ்பாவில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றனர். பைக்கை பாலமுருகன் ஓட்டி உள்ளார்.

அப்போது திடீரென நிலை தடுமாறிய பைக் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் பாலமுருகன், முத்துவேல் ஆகிய 2 பேரும் மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள கால்வாயில் விழுந்தனர். இதில் முத்துவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் படுகாயமடைந்த பாலமுருகனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலமுருகன் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறித்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, முத்துவேல் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பாலமுருகன் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீபாவளியன்று விபத்தில் வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போளூரில் பைக்குகள் மோதி 2 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(40), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அவரது அண்ணன் வெங்கடேசனை தேவிகாபுரம் பேருந்து நிறுத்தத்தில் பஸ் ஏற்றி விட்டு மீண்டும் பைக்கில் அரும்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, தேவிகாபுரத்தை சேர்ந்த கோட்டி(35), தனது உறவினர் பிரகாஷை பைக்கில் ஏற்றிக்கொண்டு போளூரில் இருந்து தேவிகாபுரம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார்.

முடையூர் அருகே 2 பைக்குகளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுப்பிரமணி உயிரிழந்தார். படுகாயமடைந்த கோட்டி, பிரகாஷை அப்பகுதிமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி கோட்டி உயிரிழந்தார். பிரகாஷ் சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Diwali ,Vellore Vellore ,Vellore ,Dinakaran ,
× RELATED தீபாவளி சீட்டு நடத்தியவர் ₹13 லட்சம்...