×

வேட்டைக்கு சென்றபோது நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் சாவு

செங்கம்: ஜவ்வாது மலையில் வன விலங்குகளை வேட்டையாட சென்றபோது நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மற்றொருவருக்கு கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்மலை அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல்(28), பிரகாஷ்(30), ரவி, சந்திரன். இவர்கள் கடந்த 11ம் தேதி இரவு நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர். நேற்று முன்தினம் காலை பிரகாஷ் நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து கன்னத்தில் லேசான ரத்த காயத்துடன் வீடு திரும்பினார். ஆனால் சக்திவேல், ரவி, சந்திரன் ஆகியோர் வீடு திரும்பவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த சக்திவேலின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வனப்பகுதியில் தேடினர். அப்போது, ஈச்சங்காடு வனப்பகுதியில் சக்திவேல் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் செங்கம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், பிரகாஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.இதில் 4 பேரும் வன விலங்குகளை வேட்டையாட அனுமதி இல்லாத நாட்டு துப்பாக்கியை எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் வேட்டையாடும் போது தவறுதலாக சக்திவேல் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். பிரகாஷ் கன்னத்தில் லேசான காயத்துடன் தப்பினார். இதையறிந்த ரவி மற்றும் சந்திரன் தலை மறைவாகிவிட்டனர். இதுகுறித்து போலீசார் கொலை வழக்கு பதிந்து தலைமறைவான ரவி மற்றும் சந்திரனை தேடி வருகின்றனர்.

The post வேட்டைக்கு சென்றபோது நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Sengam ,Javvadu Hills ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்...