×

பட்டாசுக்கு பயந்து 20 மணி நேரம் வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை

ஊட்டி: நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ்பார்க் அருகே அட்டடி, புரூக்லேண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகள் வனத்தை ஒட்டி அமைந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புரூக்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள விமலா என்பவரின் பங்களா வளாகத்தில் வளர்க்கப்படும் நாய்களை வேட்டையாடுவதற்காக சிறுத்தை ஒன்று புகுந்தது. நாய்கள் குரைப்பதை பார்த்த விமலா, வீட்டிற்குள் சிறுத்தை நுழைந்துள்ளதை அறிந்து உடனடியாக வனத்துறை மற்றும் குன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தீயணைப்புத்துறையினர் பங்களாவுக்குள் சென்றபோது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை தாக்கியது. இதில் விமலா, தீயணைப்பு வீரர்கள் கண்ணன், முரளி, குட்டி கிருஷ்ணன், விஜயகுமார், கிராம உதவியாளர் சுரேஷ்குமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய 7 பேர் காயமடைந்தனர். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் ஆர்ஆர்டி குழுவினர் வந்து அவர்களை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுத்தை பதுங்கிய பங்களாவில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், துணை இயக்குநர் அருண் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தெப்பக்காடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் வனத்துறையினர் சிறுத்தையை வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர். சிறுத்தையை பிடிக்க 2 கூண்டுகள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்த நிலையில் பாதுகாப்பு உடைகள் அணிந்த வனத்துறையினர் நுழைந்தனர். கதவுகள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் தீபாவளி தினம் என்பதால் பட்டாசுகள் சத்தம் கேட்டு சிறுத்தை பயந்து பங்களாவிற்குள்ளேயே பதுங்கியது.

இதைத்தொடர்ந்து, 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது. சிறுத்தை 20 மணி நேரத்திற்கு பின்னர் இரவு 11 மணியளவில் தானாக வெளியேறி அருகில் உள்ள வனத்திற்குள் சென்று மறைந்தது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை வெளியேறியது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டனர்.

 

The post பட்டாசுக்கு பயந்து 20 மணி நேரம் வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை appeared first on Dinakaran.

Tags : Atadi ,Brooklands ,Neelgiri District ,Gunnar Simpark ,
× RELATED மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி...