×

நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம் ரூ.3.5 லட்சம் கோடிக்கு தீபாவளி விற்பனை

* ஜவுளி, இனிப்பு, பட்டாசு, பூக்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை அமோகம்
* வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் தீபாவளி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பட்டாசு, துணி, இனிப்பு, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் இருந்ததால் வியாபாரிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீபாவளிக்கு நாடு முழுவதும் சுமார் 3.5 லட்சம் கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலையில் எழுந்து, குளித்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். காலை முதல் இரவு வரை போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். குறிப்பாக, இந்த தீபாவளி பண்டிகைக்கு பகலில் வெடிக்கும் வெடியை விட இரவு நேரத்தில் வெடிக்கும் ராக்கெட், புஸ்வானம் மற்றும் வானில் வர்ணஜாலம் காட்டும் வெடிகள் அதிகளவில் வெடிக்கப்பட்டது.

குறிப்பாக, சென்னையில் இதுபோன்ற பட்டாசுகள் வெடிக்கும்போது, இரவை பகலாக்கும் அளவுக்கு வானத்தில் பட்டாசு வர்ணஜாலம் காட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மழை இல்லாமல் இருந்தது பட்டாசு பிரியர்களை மட்டுமல்லாது, வியாபாரிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி, ஆங்காங்கே பட்டாசு விற்பனைக்காக தனி கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, சிவகாசியில் இருந்து நேரடியாக சென்னைக்கு வந்து பலரும் தள்ளுபடி விற்பனையில் பட்டாசுகளை விற்பனை செய்து அசத்தினர்.
இந்த கடைகளில் கடந்த சில நாட்களாகவே கூட்டம் அலைமோதியது.

நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை வானம் தெளிவாக இருந்ததால் பொதுமக்களும் ஆர்வமுடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். சென்னையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி வரைகூட பட்டாசு கடைகளில் பட்டாசுகளை வாங்க அதிகளவில் மக்கள் திரண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அதனால், இந்த தீபாவளிக்கு பட்டாசு வியாபாரிகள் அதிகளவில் விற்பனை செய்து, அதிக லாபம் பார்த்தனர். இரவு 11 மணி வரை சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் பட்டாசு மற்றும் மத்தாப்பு வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இதுகுறித்து சிவகாசி பட்டாசு வியாபாரிகள் சிலர் கூறும்போது, ‘‘நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டிருந்தது. இதனால் சிவகாசி பட்டாசு தொழிலாளிகள் பெரியஅளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு, தமிழகத்தில் மழை இல்லாததால் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே சென்னையில் தீவுத்திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பட்டாசுகள் விற்கப்பட்டது. பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் முக்கிய நகர பகுதியான மதுரை, திருச்சி, கோவை, சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேரடியாக சிவகாசியில் இருந்து பட்டாசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருந்தோம். இதுதவிர தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களுக்கும் சிவகாசியில் இருந்து பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளில் மழை இல்லாமல் வானம் தெளிவாக இருந்ததால் பட்டாசு பிரியர்கள் மிகவும் ஆர்வமுடன் பட்டாசு வெடிக்க முடிந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பட்டாசு வியாபாரிகள் அதிக லாபம் பெற்று இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் (தமிழகம் உள்பட) ரூ.6 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனையாகி இருக்கலாம். ஆனாலும் இதுகுறித்து முழுமையான தகவல் ஒரு சில நாட்களில்தான் ெதரியவரும்’’ என்றனர்.

இதேபோன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.32 ஆயிரம் கோடிக்கு தங்கம், வெள்ளி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகை வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி அவர்கள் கூறும்போது, ‘‘எப்போதுமே பண்டிகை உள்ளிட்ட நல்ல நாட்களில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை வாங்குவது பலரது விருப்பமாக இருக்கிறது. அதிலும் தீபாவளி பண்டிகைக்கு புது மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளிக்கு மோதிர விற்பனை ஜோராக இருந்தது. பிரேஸ்லெட் உள்ளிட்ட நகைகளின் விற்பனையும் சூடு பிடித்தது. அதேபோல் ஒரு சிலர் தீபாவளிக்கு பரிசாக பெண்களுக்கும் தங்கம் வாங்கிக் கொடுப்பர். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம், வெள்ளி அதிகரித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதும் தங்கமும் வெள்ளியும் ரூ.32 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகை வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது 41 டன் தங்கமும், 400 டன் வெள்ளியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகமாகும்.

அதேபோல் கார் வாகன விற்பனையும் இந்த ஆண்டு இரு மடங்கு அதிகரித்துள்ளது. தீபாவளியையொட்டி இரண்டு மடங்கு கார் விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு 32 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 55 ஆயிரம் மாருதி சுசூகி கார்கள் விற்பனை ஆகியுள்ளது. ஹுண்டாய் கார்கள் 10,300க்கும் மேற்பட்டவை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று தீபாவளியையொட்டி எலக்ட்ரானிக் பொருட்கள், இனிப்பு, நகை, துணி வர்த்தகம் சுமார் 3 லட்சம் கோடியில் இருந்து ரூ.3.5 லட்சம் கோடி வரை நடந்திருக்கலாம் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கூட்டமைப்பினர் தெரிவித்த தகவல் வருமாறு:

நாடு முழுவதும் நவம்பர் துவக்கத்திலேயே பண்டிகை சீசன் களைகட்ட தொடங்கி விடுகிறது. தீபாவளிக்குத்தான் நாடு முழுவதும் வர்த்தகம் உச்சபட்சமாக நடைபெறும். இந்த பண்டிகை சீசனில் இந்த முறை சுமார் ரூ.3 லட்சம் கோடியில் இருந்து ரூ.3.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ெடல்லியில் மட்டும் இந்த பண்டிகை காலத்தில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளது. அதேபோன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பொருட்கள் ரூ.45,500 கோடி, நகைகள் ரூ.31,500 ேகாடி, ஜவுளி மற்றும் ஆடைகள் ரூ.52 ஆயிரம் கோடி, இனிப்பு வகைகள் மற்றும் உலர் பழங்கள் ரூ.14,000 கோடி, அழகு சாதன பொருட்கள் ரூ.21,000 கோடி, மொபைல் ேபான், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் ரூ.28,000 கோடி, பூஜை பொருட்கள் ரூ.10,500 கோடி, சமையலறை பொருட்கள், பாத்திரபண்டங்கள் ரூ.10,500 கோடி, பேக்கரி மற்றும் இனிப்பு பொருட்கள் ரூ.7,000 கோடி, பரிசு பொருட்கள் ரூ.28,000 கோடி, வீட்டு உபயோக பொருட்களான மர சாமான்கள் ரூ.14,000 கோடி, வாகனங்கள், மின்சார பொருட்கள், விளையாட்டு பொருட்கள் ரூ.70,000 கோடி வர்த்தகம் நடைபெற்றதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

* பூக்கள் விற்பனை அமோகம்

பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்புகளை தொடர்ந்து பூக்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு. பூஜை முதல் அலங்காரம் வரை பூக்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இந்த தீபாவளி பண்டிகைக்கு நாடு முழுவதும் பூக்கள் விற்பனை களை கட்டியுள்ளது. தமிழகத்தில் தோவாளையில் தீபாவளியன்று மட்டும் சுமார் ரூ.50 லட்சத்துக்கு பூக்கள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுபோல் சென்னையில் கோயம்பேட்டில் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் பூக்கள் விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

* ரூ.52 ஆயிரம் கோடிக்கு ஜவுளி விற்பனை

பட்டாசு விற்பனையை போன்று ஜவுளிக்கடைகளிலும் விற்பனை அமோகமாக இருந்தது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஜவுளிக்கடைகளில் கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதியது. கடந்த சில ஆண்டுகளைவிட இந்த ஆண்டு புதிய ஆடைகளின் விலை அதிகளவில் இருந்தாலும், பொதுமக்கள் அதை பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக மக்களிடம் பணப்புழக்கமும் குறைவாக இருந்ததால் ஜவுளி விற்பனை மந்தமாகவே இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாததாலும், பொதுமக்கள் புதிய ஆடை வாங்க அதிக ஆர்வம் காட்டினர். நாடு முழுவதும் சுமார் ரூ.52 ஆயிரம் கோடிக்கு ஜவுளி விற்பனை நடந்ததாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஜவுளி விற்பனை நடந்திருக்கலாம் என்று வணிகர்கள் தெரிவித்தனர்.

The post நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம் ரூ.3.5 லட்சம் கோடிக்கு தீபாவளி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Nationwide Kolagala Celebration Diwali ,Chennai ,Tamil Nadu ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...